புதுடில்லி: இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு செய்யவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டில்லியில் நேற்று துவங்கிய ‘பாரத் மின்சார உச்சி மாநாடு 2026’ நிகழ்ச்சியில், பிரதமரின் செய்தியை மத்திய மின்சார துறை செயலர் பங்கஜ் அகர்வால் வாசித்தார். அதில் மோடி மேலும் கூறியுள்ளது: உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க மின்சாரத் துறையை வலுப்படுத்துவது அவசியமானது.
இதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா பெரும் சாதனை படைத்து வருகிறது.
தற்போது கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமான மின் சக்தி, புதைபடிவமற்ற எரிசக்தி வாயிலாக கிடைக்கிறது. வரும் 2030க்குள், இத்தகைய பசுமை மின் உற்பத்தியை 500 ஜிகாவாட் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் கூறினார்.
