சென்னை: கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட அபகரிக்க அனுமதிக்கப்படாது என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அறிக்கை கிடைத்தவுடன் இதற்கு பொறுப்பானர்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழநி கோவிலுக்குச் சொந்தமான சொத்து விவரங்களைத் திரட்டுவதற்காக ஒரு குழுவை அமைத்து உள்ளோம். அதனைத் தொடர்ந்து அறுபடை வீடு கோவில்கள் மற்றும் பின்னர் பரந்த நிலப்பரப்புகளைக் கொண்டுள்ள 50 முக்கிய கோவில்கள் தொடர்பான விவரங்களைத் திரட்ட உள்ளோம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆவணம் கோவிலின் பெயரில்தான் இருக்கும், ஆனால் நாங்கள் வருவாய் பதிவேடுகளைப் புதுப்பித்தல் பட்டாவைச் சரிபார்த்து, இந்த நிலங்கள் விவசாயத்திற்கா, வணிக நடவடிக்கைகளுக்கா அல்லது வேறு எதற்காகவாவது பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம் ஆக்கிரமிப்புகள், குத்தகை மீறல்கள் மற்றும் வாடகை சரியான நேரத்தில் செலுத்தப்படுகிறதா என்பதும் ஆராயப்படும். கோவில் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கும், சட்டப்பூர்வமான குடியிருப்பாளர்களுக்கும் இனாமாக வழங்கப்பட்ட நிலம் திரும்பப் பெறப்படாது. கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட அபகரிக்க அனுமதிக்கப்படாது. அரசியல் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கடவுளுக்கும், தமிழக மக்களுக்கும், முதல்வர் விஜய்க்கும் மட்டுமே பொறுப்புடையவன். வரும் ஆண்டுகளில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கோவில் நிர்வாகத்தை நவீனமயமாக்குதல், கோவில் ஊழியர்களின் நலனை பாதுகாப்பது, கோவில் பாரம்பரியத்தையும், சொத்துக்களை பாதுகாப்பது ஆகிய நான்கு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தப்படும்.
கோவில் நிதியானது உண்மையான தேவை இருக்கும் இடத்தில் செலவிடப்பட வேண்டும். ஒரு நாளைக்குச் சில நூறு பக்தர்கள் மட்டுமே வரும் கோவிலில் விலையுயர்ந்த வாகன நிறுத்துமிடத்தைக் கட்டுவதில் எந்தப் பயனும் இல்லை. பல கட்டண தரிசனப் பிரிவுகளுக்குப் பதிலாக, இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என இரண்டை மட்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். கோவிலின் நிதி நிலையை மேம்படுத்த இப்போது கட்டண தரிசனம் தேவைப்படுகிறது. பின்னர், நிலைமை மேம்படும்போது, அதை ரத்து செய்யலாம். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
