காந்திநகர்: குஜராத்தில் இதுவரை இல்லாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் இருந்து வீசும் அதிக ஈரப்பதம் கொண்ட தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சாதகமான வானிலை காரணமாக அதீத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குஜராத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது.
வால்சாத் மாவட்டத்தில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள உம்பர்ஹான் பகுதியில் 906 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல, கப்ராடா, நானாபொந்தா, தராம்பூர், பார்டி, வாபி, வல்சாத் ஆகிய பகுதிகளில் பேய் மழை பெய்துள்ளது.
தென் குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளிலிருந்து சுமார் 1,200க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், சுமார் 50 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, அடுத்த இரண்டு நாட்களுக்குக் குஜராத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
