நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரியும், கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது, நீட் தேர்வு தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பாதிப்பதாகவும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டத்தை வித்தியாசமான முறையில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பறை மற்றும் சிங்கி இசைக் கருவிகளை முழங்கியபடி நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். மேலும், முழக்கங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்து, மாநிலங்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர்.
இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் வரும் நாட்களிலும் தொடரும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தெரிவித்தனர். மேலும், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக எஸ்.எப்.ஐ மற்றும் டிஒய்எப்ஐ, மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர் அந்த மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக அலுவலகம் அருகில் இருந்து காந்திபுரம் ரவுண்டானா வரை பேரணியாக வந்த அவர்கள் மத்திய அரசை கண்டித்தும் மத்திய கல்வித்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் டார்ச் அடித்தும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
பி. ரஹ்மான். கோவை மாவட்டம்.
