ஜனநாயகன் பார்த்தா மூளை சுறுசுறுப்பாகும் – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்..!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தார் ஜே.சி.டி.பிரபாகர். தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற இவர், சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் நடத்திய முதல் உலகத் தமிழர் தொழில் வணிக மாநாட்டில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், “தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியில் ஏற்கனவே தொழில்துறைக்கு பல அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை செயல்படுத்த முதல் விஜய் தலைமையிலான அரசு தயாராக உள்ளது” எனக் கூறினார்.

இந்த சந்திப்பில் ஜனநாயகன் திரைப்படம் மாணவர்கள் போராட்டத்தை மழுங்கடித்து விட்டதா என சபாநாயகரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சபாநாயகர், “ஜனநாயகன் திரைப்படத்திற்கும், மாணவர்கள் போராட்டத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இத்திரைப்படம் எப்போது வெளியாகப் போகிறது என்ற தேதியை ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். மாணவர்களின் மூளையை மழுங்க செய்யும் படம் ஜனநாயகன் அல்ல. இந்தப் படத்தைப் பார்த்தால் மூளை சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்படும்” எனக் கூறினார்.

ஜனநாயகன் திரைப்படத்தைப் பலரும் புகழ்ந்து வரும் நிலையில், சபாநாயகர் பொதுவெளியில் இப்படியான ஒரு கருத்தை சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் மாணவர்கள் போராட்டத்தை மறைக்க ஜனநாயகன் படம் வெளியாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் சபாநாயகரின் பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Source link