மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆதார் செயலி (Aadhaar App) 4 கோடி பதிவிறக்கங்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. வீட்டில் இருந்தபடியே முகவரி மாற்றம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் புதுப்பித்தல், மின்-ஆதார் (e-Aadhaar) பதிவிறக்கம் மற்றும் பயோமெட்ரிக் லாக்/அன்லாக் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறக்கூடிய தளமாக இச்செயலி உருவெடுத்துள்ளது.
மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை 1.91 கோடிக்கும் அதிகமான முறை பயனர்கள் இச்செயலி மூலம் தங்கள் பயோமெட்ரிக் தரவுகளைப் பூட்டும் (Lock) மற்றும் திறக்கும் (Unlock) வசதியைப் பயன்படுத்தியுள்ளனர்.
பயோமெட்ரிக் லாக் (Biometric Locking) என்றால் என்ன?
பயோமெட்ரிக் லாக் என்பது ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் விரல்ரேகை, விழித்திரை (Iris) மற்றும் முக அங்கீகாரத் (Face authentication) தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்புக் அம்சமாகும்.
பயோமெட்ரிக் லாக் செய்யப்பட்ட பிறகு, யாராவது உங்கள் விரல்ரேகை அல்லது விழித்திரையைப் பயன்படுத்திச் சரிபார்க்க முயன்றால், ‘330’ என்ற பிழைக் குறியீடு (Error code ‘330’) திரையில் தோன்றும். இதனால் உங்கள் அனுமதியின்றி பயோமெட்ரிக் அங்கீகாரத்தைச் செய்ய முடியாது.
ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆண்ட்ராய்டு (Android): கூகுள் பிளே ஸ்டோருக்குச் செல்லவும்.
ஐஓஎஸ் (iOS): ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் செல்லவும்.
தேடுதல் பெட்டியில் ‘Aadhaar (by UIDAI)’ எனத் தட்டச்சு செய்து, ‘Install’ என்பதை கிளிக் செய்யவும்.
ஆதார் பயோமெட்ரிக்கை லாக் (Lock) செய்யும் முறை
புதிய ஆதார் செயலியைத் திறந்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் MPIN-ஐ உள்ளிட்டு உள்நுழையவும்.
திரையில் காணப்படும் ‘Biometrics Unlocked’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
‘Confirm Biometrics Lock’ என்பதைத் தட்டவும். இப்போது உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவுகள் பாதுகாப்பாகப் பூட்டப்படும்.
கவனத்திற்கு: ஆதார் செயலியுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணையோ அல்லது போனையோ இழக்க நேரிட்டால், அதை மீட்டெடுக்கும் வரை செயலி மூலம் ஆதாரைப் பயன்படுத்த முடியாது.
பூட்டப்பட்ட பயோமெட்ரிக்கை திறக்கும் (Unlock) முறை
ஆதார் செயலியைத் திறந்து, உங்கள் MPIN-ஐ உள்ளிட்டு கணக்கிற்குள் செல்லவும்.
திரையில் தோன்றும் ‘Biometrics Locked’ ஐகானைத் தட்டவும்.
‘Confirm Unlock Biometrics’ என்பதை கிளிக் செய்யவும். உங்கள் பயோமெட்ரிக் தற்காலிகமாகத் திறக்கப்படும்.
யார் பயோமெட்ரிக் லாக் வசதியைப் பயன்படுத்தலாம்?
தங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் பதிவு செய்துள்ள அனைத்து ஆதார் அட்டைதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இது தனிநபரின் பயோமெட்ரிக் தரவுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை வழங்குகிறது.
