புதுடில்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் 3 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எந்தப் பேச்சுவார்த்தையிலும், விவாதத்திலும் கலந்து கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
பார்லி வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு 3 கோரிக்கைகள் உள்ளன. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது தான். தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கும் வரை எந்தப் பேச்சும், எந்த விவாதமும் நடத்தப்போவதில்லை.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பார்லியில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். பொதுவாக, வழக்கமான விதிமுறைகளின்படி, அவையில் ஒருவரின் பெயரைக் குறிப்பிடும் போது, அவர் பேச வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், நான் பதிலளிக்க விரும்பிய போது, என்னுடைய மைக் அணைத்து வைக்கப்படுகிறது. எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாணவர்களின் 3 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில், எந்தப் பேச்சுவார்த்தையும், எந்த விவாதத்தில் பங்கேற்க மாட்டோம் என்பது தான் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு, இவ்வாறு அவர் கூறினார்.
