டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தித் தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் தான் இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்தியதாகக் கூறப்படும் தடியடி சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு மனுதாரர்கள் தரப்பில் நேற்று முன்தினம் (22.07.2026) முறையீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில், “மாணவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கான பல்வேறு வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
அதற்கு தலைமை நீதிபதி, “வீடியோக்களை பார்ப்பதற்கு தற்போது நேர அவகாசம் இல்லை. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மேலும், இந்த வழக்கை இன்றே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், தேவையெனில் மறுநாள் பட்டியலிட வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தாக கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தடியடி சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக முறையான மனு எதுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. யாரோ ஒருவர் கோரிக்கையாக ஒரு கடிதத்தை மட்டும் அனுப்பியிருந்தார். முறையாக மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், அந்த விவகாரத்தை நீதிமன்றம் எவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும்?. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தாலும், அவற்றில் உண்மை இல்லை அதே சமயம், மாணவர்கள் மீதான தடியடி சம்பவம் தொடர்பாக சட்டப்படி முறையான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில் நீதிமன்றத்திற்கு எந்தவித தயக்கமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
