ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மேயர் சுஜாதாவின் ஓட்டுநர் காரை வேகமாக இயக்கிச் சென்றிருக்கிறார். இதுபற்றி, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலெட்சுமியிடம் அ.தி.மு.க வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகாராக பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து, தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த வேளாண் கண்காணிப்பாளர் சதீஷ்வேலன் என்பவர் சத்துவாச்சாரி காவல் நிலையம் சென்று புகாரளித்தார்.

புகாரில், “எங்கள் குழுவினருடன் ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் வந்து எங்களிடம் `தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப் பொருள்கள் தருகிறார்கள்’ என்று தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, அந்த வழியாக வந்த `TN 23 DK 9579’ பதிவெண் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றோம். காரில் முன்பக்கம் அமர்ந்திருந்தவர் `நான் மேயர்’ என்று கூறினார். சோதனைக்கு ஒத்துழைக்கச் சொன்னபோது, அவரின் ஓட்டுநர் காரை ஓட்டிச் சென்றுவிட்டார். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.
புகாரின் அடிப்படையில், `பி.என்.எஸ் 173 – தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 – அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இருப்பிரிவுகளின்கீழ் மேயரின் ஓட்டுநர் மீது போலீஸார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
“பரிசுப் பொருள் வழங்கிய மேயர் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அவரின் ஓட்டுநர் மீது சப்பைக் கட்டுக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். தேர்தல் விதிகளை மீறியது தி.மு.க மேயர் என்பதால், அதிகாரிகளும் காவல்துறையினரும் ஒருதலைபட்சமாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எனவே, மேயர் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு காட்டமாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இன்று அதிகாலை நேரத்தில் மேயர் சுஜாதாவின் காரை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அடுத்தகட்டமாக, மேயர் சுஜாதாவின் பெயரையும் வழக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனராம்.
