நீட் விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், போராட்டங்களையும் தூண்டியுள்ளது. குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் முன்னெடுத்த அமைதி போராட்டமும் அவர்களை வன்முறையால் கையாண்ட காவல் துறையினரின் நடவடிக்கையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்து வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் எழுப்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். இவர்களோடு நடிகை ஆண்ட்ரியாவும் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அமீர், “ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு சிறு கூட்டம் போராடிக்கொண்டிருக்கும் இதே வேளையில் ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெருங்கூட்டம் போராடிக்கொண்டிருக்கிறது. அந்த கூட்டம் இந்த கூட்டத்தை விட பெரிய கூட்டமாக இருக்கலாம், ஆனால் இந்த கூட்டம் அவர்களை விட அறிவார்ந்த கூட்டம். எனக்கு முன்பு இங்கே பேசிய ரேவதி, நீட் தேர்வை பற்றி பேசுவதற்கு போதிய அறிவு இல்லை என்றும் இருந்தாலும் மாணவர்களுக்காக வந்திருக்கிறேன் என்றும் சொன்னார். நீட் தேர்வை கொண்டு வந்தவனுக்கு மட்டும் அறிவு இருந்ததா? அவனுக்கும் அது இல்லை.
பத்தாண்டுகளாக நீட்டுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம். நீட் வருவதற்கு முன்பாகவே சென்னை ப்ரஸ் கிளப்பில் நான், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர், அது பெரும் சிக்கல் என பேசியிருக்கிறோம். அதை யாரும் காது குடுத்து கேட்கவில்லை. அனிதா மரணத்தில் ஆரம்பித்த ஓலம் இன்றைக்கு வரைக்கும் நிற்கவில்லை. நீட்டை ஒழிப்பதற்கு ரகசியம் இருப்பதாக சொன்னர்வர்களும் அனிதா வீட்டிற்கு சென்று ஆதரவு கொடுத்தவர்களும் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஒன்றுமே செய்யவில்லை. இந்த ஆட்சியாளர்கள் நீட்டுக்கு எதிராக ஒரு நிலையை கொண்டு வருவார்கள் என நம்பிக்கொண்டு இருப்பது ஏமாற்று வேலை. அதை எந்த அரசும் செய்யாது.
உண்மையிலே நீட்டை ஒழிக்க அவர்கள் நினைத்தால் ஒன்றிணைந்து செய்ய முடியும். ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு அரசியல் என்பது பிழைப்பு வாதம். ஆனால் அதிகாரத்தை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நின்று கொண்டிருப்பது நம்பிக்கை கொண்ட கூட்டம் மட்டும் தான். தமிழ்நாடு எப்போதும் ஒரு சிந்திக்கும் கூட்டம் என்று ஜேம்ஸ் வசந்தன் சொன்னார். அது இப்போது தியேட்டர் பக்கம் போய்விட்டது.
டெல்லியில் உரிமையை கேட்க வந்த மாணவர்களை அடிக்கிறார்கள். அவர்களை அடிக்கும் காவல் துறையினரும் துணை இராணவமும் உங்களுடைய தேர்வில் குளறுபடிகள் நடந்தால் இப்படி தான் இருப்பார்களோ. உங்களுக்கு எப்படி வலித்திருக்குமோ அதே போல் தான் அவர்களுக்கும் வலித்திருக்கும். மேல் அதிகாரிகள் அடி என்றால் அடித்து விடுவீர்களா. கேவலமாக நடந்து கொள்ளாதீர்கள்.
ராகுல் காந்தி டெல்லியில் போராடுகிறார், ஆனாலல் அவர் கட்சி ஆட்சியில் இருக்கும் கேரளாவில் மாணவர்கள் போராட அனுமதி மறுக்கிறார்கள். இது என்ன அரசியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் போராடுபவர்கள் எந்த ஆயுதமும் எடுத்து வரமாட்டார்கள். ஆனால் அவர்களை தடுக்க வருகிறோம் என சொல்லும் காவல்துறையும் இராணுவமும் லத்தி, தலைகவசம், துப்பாக்கி என வைத்திருப்பார்கள். அப்போது யார் கலவரம் செய்ய வந்தது. இது அதிகார வர்கத்தின் செயல்முறை.
நாளைக்கே இந்த இடத்தில் போராட்டம் வலுபெற்றால் காவல் துறையினரே மாணவர்களை அடிக்காதீர்கள். எப்போதாவது எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என யாரையாவது அடித்திருக்கிறீர்களா? ஏன் எப்போதும் எளியவனை மட்டும் அடிக்கிறீர்கள். அவர்களிடம் அன்பாக பேசுங்கள். போராடுவது என்பது இந்த நாட்டின் ஜனநாயக உரிமை. அதை அவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். சாதி, மத ஊர்வலங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல் போராட்டங்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கள். அன்பான மாணவர்களே… இந்த எழுச்சியும் சிந்தனையும் தான் நம்முடைய அடுத்த தலைமுறையை மீட்குமே தவிர கட்சிகளும் தலைவர்களும் மீட்க மாட்டார்கள்” என்றார்.
