கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ரூ.9,500 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம், தங்களது கூகுள் பிளே செயலி போட்டியாளர்களைப் பாதிக்கும் வகையில், வாடிக்கையாளர்களை வணிக நெறிமுறைகளுக்கு மாறாக ஈர்த்ததாகக் கூறி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், முன்னதாக ஆன்ராய்டு இயங்கு தளத்தை வணிக நெறிமுறைகளுக்கு மாறாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த விதி மீறலுக்காக இந்நிறுவனத்திற்கு ரூ.38,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், இது போன்ற நடவடிக்கைகள் புதுமையையும், நுகர்வு நலனையும் பாதிக்கும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தற்போதைய விதி மீறிய செயல்பாடுகளைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் ரூ.9,500 கோடி அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவின் விமர்சனங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது போட்டியாளர்களை ஒடுக்குவதைத் தடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருப்பதை இந்த நடைமுறை தெளிவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது.
