‘ஒரண்ட’: வித்தியாசமான விளம்பர யுத்தி மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சுசி கணேசன்!

‘ஒரண்ட’ படத்தின் வேறு எந்த தகவலையும் வெளியிடாமலேயே தலைப்பை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கிய இயக்குநர் சுசி கணேசன். நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக மாற்றியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.

கதை குறித்தோ, கதாபாத்திரங்கள் குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில், அன்றாட பேச்சுவழக்கில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக மாற்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வித்தியாசமான விளம்பர உத்தி பலரது கவனத்தை பெற்றுள்ளது. 

ஒரு திரைப்படத்தின் முதல் பேசுபொருள் அதன் தலைப்பாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்ட இயக்குநர் சுசி கணேசன், மீண்டும் ஒருமுறை அதனை நிரூபித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 85% சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளும் விரைவில் நிறைவடையவுள்ளன. அதன் பிறகு படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. 

தலைப்பின் மூலமே ஒரு திரைப்படத்தைப் பற்றிப் பேச வைப்பது சுசி கணேசனுக்கு புதிதல்ல. ‘விரும்புகிறேன்’ திரைப்படத்தின் மூலம் பழமையான ஒரு தமிழ்ச்சொல்லையே மறக்க முடியாத திரைப்படத் தலைப்பாக மாற்றினார். அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக அண்ணா சாலையில் தீயணைப்பு குழாய்களால் பிணைக்கப்பட்ட நிலையில் நாயகன் – நாயகி இடம்பெற்ற பிரம்மாண்ட விளம்பரம் அன்றைய காலகட்டத்தில் பெரும் பேசுபொருளானது.

‘5 ஸ்டார்’ என்ற தலைப்பின் மூலம் ஒரு சாதாரண சொல்லை என்றும் மறக்க முடியாத நட்பின் அடையாளமாக மாற்றினார். ‘திருட்டுப் பயலே’ திரைப்படத்தின் தலைப்பே அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று இயக்குநர் கே. பாக்யராஜ் பொதுவெளியில் பாராட்டியிருந்தார். ‘கந்தசாமி’ திரைப்படத்தின் மூலம் ஒரு பொதுஜன பெயரையே பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோவின் அடையாளமாக உயர்த்திய சுசி கணேசன், அந்தப் படத்தின் துவக்க விழாவிலேயே கையடக்க டிஜிட்டல் திரையில் டிரெயிலரை வெளியிட்டு, அக்காலத்திலேயே புதுமையான விளம்பர உத்தியை அறிமுகப்படுத்தியிருந்தார்.

திரைப்படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல, ரசிகர்களுக்கும் கதைக்கும் இடையிலான முதல் உணர்வுப்பூர்வமான இணைப்பு என்பதைக் காலம் தோறும் நிரூபித்து வருபவர் சுசி கணேசன். இப்போது, ‘ஒரண்ட’ மூலமும் அதையே மீண்டும் ஒருமுறை நிகழ்த்தியிருக்கிறார். 

Source link