நீதிமன்ற நடவடிக்கைகளை வீடியோவாக பகிரவும், பதிவு செய்யவும் சுப்ரீம் கோர்ட் தடை

புதுடில்லி: நீதிமன்ற நடவடிக்கைகளை முன் அனுமதியின்றி ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வது அல்லது பதிவிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

கட்டுப்பாடு

இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது: நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியை மட்டும் தேர்வு செய்து, சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் பரப்புவது நீதிமன்றங்களின் கண்ணியத்தை குலைப்பதோடு, நீதி வழங்கும் அமைப்பின் மீதான பொது மக்களின் நம்பிக்கையையும் சிதைப்பதாக உள்ளது. நீதமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு மற்றும் வீடியோவை பகிர்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் பக்ஷி, நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கேலிக்கூத்து

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதாடுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைமை நீதிபதியை நோக்கி ஒருவர் காகிதங்களை வீசியதுடன், அவரை அவதூறாக பேசிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின. இது ஒரு கேலிக் கூத்தாக மாறிவிட்டது எனத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீதிபதிகள் அல்லது வழக்கறிஞர்களின் வார்த்தைகளை மாற்றி அமைத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய முடியும் எனக்கூறினார்.

நோட்டீஸ்

இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ஐகோர்ட் பதிவாளர்கள் அல்லது சுப்ரீம் கோர்ட் செயலாளர் ஜெனரல் அனுமதி இல்லாமல் சமூக ஊடகம் அல்லது வேறு எந்த டிஜிட்டல் தளங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆடியோ அல்லது வீடியோ வடிவில் பிரித்தெடுத்தோ, மாற்றம் செய்வதோ, பதிவிடுவதோ, மறுபதிவிடுவதோ, பதிவேற்றம் செய்வதோ அல்லது அதன் வாயிலாக வருமானம் ஈட்டுவதோ கூடாது.

இந்த உத்தரவு நீதிமன்ற நடவடிக்கைகளை செய்தியாக வெளியிடுவதில் பாதிப்பு ஏற்படுத்தாது. மற்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்கும் உத்தரவாக கருதக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது தொடர்பாக மெட்டா, எக்ஸ் மற்றும் மற்ற சமூக ஊடகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

ஒழுங்குபடுத்த வேண்டும்

நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: வீடியோ பதிவிடுவதையும் மற்றும் பதிவேற்றம் செய்வதையும் தான் தடுத்துள்ளோம். ஆடியோ அல்லது வீடியோ வடிவில் நேரலை செய்ய வேண்டும் என்றால் ஐகோர்ட் பதிவாளர்கள் அல்லது சுப்ரீம் கோர்ட் செயலாளர் ஜெனரலிடம் முன் அனுமதி பெற வேண்டும். நேரலை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள், நேரலையாக பார்க்க விரும்புகிறேன் என விண்ணப்பம் செய்ய வேண்டும். நீதிமன்றம் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் பொழுது போக்கு சேனல் ஆக இருக்க முடியாது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலான விசாரணையின்போது, இணையவழி அழைப்புகள் கட்டுப்பாடின்றி அணுகப்படுகிறது. அதனை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

நீதிபதி மோகனா தனது உத்தரவில், இந்த உத்தரவை பேச்சுவார்த்தை சுதந்திரம் மீதான தடை உத்தரவு அல்ல என தெளிவுபடுத்தி உள்ளார்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தனது வார்த்தைகள் எப்படி மாற்றி விடப்பட்டன என்பது குறித்து விளக்கினார்.

அனுபவம்

அதில் அவர், அச்சு ஊடகத்தில் நான் இத்தகைய அனுபவத்தை உணர்ந்து உள்ளேன். நான் சொல்லாத விஷயங்களை அவர்கள் திணித்துள்ளனர் எனக்கூறிய அவர், கடந்த இரண்டு நாட்களில் ஒரு வழக்கு( கடந்த 20ம் தேதி டில்லியில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக) தாக்கல் செய்யப்பட்டதாக முற்றிலும் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட மறுத்துவிட்டதாக ஊடகங்களில் எந்தப் பொறுப்பும் இன்றி தவறான செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

காலை10 மணி வரை ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. யாரோ அனுப்பிய கோரிக்கை மனு மட்டுமே. அந்த கோரிக்கை மனுவை எப்படி ஒரு ரிட் மனுவாக கருத முடியும். ஆனால், பொறுப்பற்ற முறையில் இது குறித்து செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டனர் எனத் தெரிவித்தார்.

Source link