மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முதல் போட்டி, ஜூலை 24ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வட்டாரத்திற்குள் நடைபெறும் விஷயங்கள், பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
காரணம், வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் தான். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அல்ஜாரி ஜோசப்பை சேர்த்த நிலையில், அவர் எந்த காரணமும் கூறாமல், அணியைவிட்டு வெளியேறிவிட்டார். இதுகுறித்து, தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் ஷமி பேசியுள்ளார்.
அதில், ‘‘இது, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பெரிய இழப்புதான். அல்ஜாரி ஜோசப்பை, டெஸ்ட் தொடருக்கு சேர்த்தோம். ஆனால், என்னால் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது எனக் கூறி அல்ஜாரி ஜோசப் விலகிவிட்டார். அதற்கான, தெளிவாக காரணத்தை கூட விளக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்து, முழு பிட்னஸை நிரூபித்ததால்தான், டெஸ்ட் தொடரில் சேர்த்தோம். ஆனால், சொந்த காரணங்களுக்காக விலகுகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு விலகிவிட்டார்’’ என ஷமி கூறினார்.
அல்ஜாரி ஜோசப், மேற்கிந்தியத் தீவுகள் அணியின், மூன்று பார்மெட்டிலும் விளையாடக் கூடிய முக்கிய வீரராக இருக்கிறார். டெஸ்ட்டில், இதுவரை 42 போட்டிகளில் விளையாடி, 130 விக்கெட்களை எடுத்து, அணியின் நம்பிக்கை நட்சத்திர பௌலராக இருக்கிறார்.
அதிரடி முடிவு: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள், உரிய காரணங்களை கூறாமல், விளையாட மறுத்தால், அவர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, உலக அளவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களிலும் பங்கேற்க, அனுமதி வழங்க முடியாது என, புது விதிமுறையை சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
அல்ஜாரி ஜோசப்புக்கு கெடு: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய அல்ஜாரி ஜோசப், விரைவில் அதற்கான தெளிவான காரணத்தை கூற வேண்டும். ஒருவேளை, அது ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாக இருந்தால், அல்ஜாரி ஜோசப்பை தடை செய்ய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிகமுக்கியமான தொடர்: பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, மிகமுக்கியமான தொடராகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 16.67 சதவீத புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி, 8.33 சதவீத புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.
இதனால், இத்தொடர் இரு அணிகளுக்கும் மிகமுக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஹோம் கிரௌண்டில் ஆட உள்ளதால், இத்தொடரில் 2 போட்டிகளிலும் வென்று, அதிக புள்ளிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, அல்ஜாரி ஜோசப், திடீரென்று விலகியிருப்பது, ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, 2ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
