‘அன்னைக்கு அவர் பண்ணதும் இதேதான்’: தர்மேந்திர பிரதானை அலற வைக்கும் பழைய பேட்டி வெளியீடு

டெல்லி:

“வாழ்க்கை ஒரு வட்டம் சார்…” என்ற திரை வசனத்திற்கு மிகச்சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது தற்போதைய இந்திய அரசியல் சூழல்.

இன்று நாட்டின் உயர்கல்வித் துறையைத் தீர்மானிக்கும் மத்தியக் கல்வி அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான், 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே வினாத்தாள் கசிவுப் பிரச்சனைக்காகத் வீதியில் இறங்கிப் போராடி அடிபட்டவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், வரலாறு சில நேரங்களில் விசித்திரமான முரண்களைத் தன் பக்கங்களில் எழுதி வைக்கிறது.

1997-ஆம் ஆண்டு, தர்மேந்திர பிரதான் ஒடிசா மாநிலத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் தேசியச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அம்மாநிலத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது.

மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்க, அப்போதைய பட்நாயக் அரசுக்கு எதிராக ஒடிசா தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராடத் திட்டமிட்டார் தர்மேந்திர பிரதான்.

சக நிர்வாகியின் நெகிழ்ச்சிப் பேட்டி:

“சுமார் 1,500 மாணவர்களுடன் நாங்கள் அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்தினோம். ஆனால், காவல்துறை எங்கள் மீது கொடூரமான தடியடியை நடத்தியது. அதில் தர்மேந்திர பிரதானுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படும் அளவுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன” என்று அவருடன் களத்தில் நின்ற ABVP நிர்வாகி ஒருவர் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தன் ரத்தத்தைச் சிந்திய அந்த இளம் மாணவர் தலைவர், படிப்படியாக அரசியலில் உயர்ந்து இன்று இந்தியாவின் மத்தியக் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

2024–2026: தலைகீழாக மாறிய காலம்

காலத்தின் சக்கரம் சுழன்றது… இன்று நீட் மற்றும் யு.ஜி.சி. நெட் தேர்வு வினாத்தாள் கசிவுப் பிரச்சனைகள் நாடே அதிரும் அளவுக்குப் பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன.

அன்று வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடிய அதே தர்மேந்திர பிரதானை நோக்கி, இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்:

டெல்லி ஜந்தர் மந்தரில் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர் அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அவராகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்ட போதிலும், “அமைச்சர் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என ஜென் സി (Gen Z) மாணவர் அமைப்புகளும், பிற மாணவர் இயக்கங்களும் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

ஒரு சுழற்சியின் முடிவு என்ன?

அன்று மாணவர் தலைவராக நின்று அதிகார வர்க்கத்தை எதிர்த்தவர், இன்று அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்து அதே மாணவர் போராட்டங்களைச் எதிர்கொள்கிறார்.

1997-ல் தர்மேந்திர பிரதானை ஒரு பெரிய தலைவராக உருவாக்கியதே இந்த ‘பேப்பர் லீக்’ பிரச்சனைதான் எனும் போது, இன்று அதே பிரச்சனை அவருக்கு மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியிருப்பது காலத்தின் விளையாட்டுதான். போராட்டத்தைத் தணித்து மாணவர்களின் நம்பிக்கையை மீட்க மத்திய அரசும், கல்வி அமைச்சகமும் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

Source link