மாணவர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக, காவல்துறை மூலமாக அரசு பல்வேறு வகையான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதன்படி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, பெல்லட் குண்டுகள், தடியடி மற்றும் பெண்களிடம் தவறான சீண்டல் உள்ளிட்ட பல்வேறு அருவருக்கத்தக்க வகையிலான பல்வேறு விஷயங்களை காவல்துறையினர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதே நேரத்தில், பல்வேறு வீடியோக்கள் வெளியாகி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் துணிச்சலையும், அரசின் எந்தவித அடக்குமுறைக்கும் அஞ்சிவிட மாட்டோம் என்பதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன. அந்த வகையில், கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்ற இளைஞர்களைக் காவலர்கள் தடுக்க முயன்றனர். அப்போது, காவலர்கள் இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். அந்த சமயத்தில், ஒரு காவலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களைத் தாக்க முயன்றார். அதாவது, தான் கையில் வைத்திருந்த லத்தியை ஓங்கி அடிக்க முயன்றார். அப்போது, ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது அடி விழாதவாறு, இரு கைகளையும் நீட்டி இளைஞர்களுக்குப் பாதுகாப்பு அரணாக நின்றார். இது சம்பந்தமான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து, ’பெண்ணின் வலிமை இதுதான்’, ’தாய்மையின் வலிமை மிகப் பெரியது’, ’நாட்டிற்காகத் துணிச்சலாக நிற்கும் இந்த பெண்மை தான் நமது தேசத்தின் தாய்மை’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அந்த சமயத்தில், போராட்டத்தில் இருந்த ஒரு பெண் தனியாக அந்த காவலர் வாகனத்தின் முன் நின்று வாகனத்தை நகர விடாமல் ஒற்றைக் கையால் தடுத்து நிறுத்தினர். மேலும் கைது இளைஞர்களை விடுவிக்குமாறும், அவர்களை விடுவிக்காமல் இந்த வாகனம் இங்கிருந்து நகராது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, காவலர்கள் கைது செய்த இளைஞர்களை விடுவித்தனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த பெண்ணின் தைரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பலர், இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து ரியல் சிங்கப்பெண்கள் என்றும் பாராட்டி வருகின்றனர்.
