வங்கதேச அதிபர் திடீர் ராஜினாமா

டாக்கா: வங்கதேச அதிபர் முகமது சகாபுதின் ராஜினாமா செய்துள்ளார்.

2024ம் ஆண்டு வங்கதேசத்தில் நிகழ்ந்த மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, வங்கதேச தேசியவாத கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக அரியணை ஏறினார்.

இவர் பிரதமர் ஆவதற்கு முன்பாக, ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் முகமது சகாபுதின். தாரிக் ரஹ்மான் ஆட்சியிலும் அதிபராக நீடித்தார்.

இந் நிலையில், தமது 5 ஆண்டுகாலம் அதிபர் பதவி முழுமை பெறும் முன்பே அப்பதவியில் இருந்து முகமது சகாபுதின் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளராக அறியப்பட்ட அவர் அண்மையில் ஹசீனாவை தொடர்பு கொள்ள முயற்சித்து உள்ளார்.

அதன் எதிரொலியாக சகாபுதினுக்கு நெருக்கடிகள் தரப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக தரப்பட்ட அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முகமது சகாபுதின் ராஜினாமாவை தொடர்ந்து, அவருக்கு பதிலாக இடைக்கால அதிபராக பார்லி. சபாநாயகர் ஹபீஸ் உதின் அகமது செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது

Source link