இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்பு தொகுப்பில் 2 படுக்கை விரிப்புகள் வழங்கப்படுவதன் பின்னணியில் உள்ள சுகாதாரம், பராமரிப்பு குறித்த காரணங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் விளக்கியுள்ளார்.
படுக்கை விரிப்பு தொகுப்பில் என்னென்ன இருக்கும்?
நீண்ட தூரம் மற்றும் இரவு நேரப் பயணங்களின்போது பயணிகளின் வசதி மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே இந்த வசதியை வழங்குகிறது. முதல் வகுப்பு ஏசி, 2-ம் வகுப்பு ஏசி, 3-ம் வகுப்பு ஏசி மற்றும் ஏசி எகானமி (AC Economy) ஆகிய வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கான கட்டணத்திலேயே இந்த படுக்கை தொகுப்பிற்கான கட்டணமும் அடங்கியுள்ளது. ஒரு தொகுப்பில் 2 படுக்கை விரிப்புகள் (Bed sheets), ஒரு தலையணை உறை (Pillow cover) மற்றும் ஒரு கைதுண்டு (Hand towel) ஆகியவை அடங்கியிருக்கும்.
2 படுக்கை விரிப்புகள் வழங்கப்படுவது ஏன்?
மாநிலங்களவை எம்.பி சந்திரகாந்த் தாமோதர் ஹண்டோரே எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏ.சி வகுப்புகளில் வழங்கப்படும் ஒரு படுக்கை விரிப்பு, பயணிகள் அமரும் அல்லது தூங்கும் இருக்கையின் மீது விரிப்பதற்காகவும், 2-வது படுக்கை விரிப்பு கம்பளிக்கு அடியில் போர்த்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கம்பளி நேரடியாக பயணிகளின் உடலோடு தொடர்புகொள்வது தவிர்க்கப்படுகிறது. படுக்கை விரிப்புகள் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்பட்ட பிறகும் துவைக்கப்படுகின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கம்பளிகள் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் நிலையில், படுக்கை விரிப்புகள் ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் துவைக்கப்படுவதற்கான சுகாதாரக் காரணங்கள் குறித்தும் எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார். ரயில்வே படுக்கைகளின் தூய்மையைப் பராமரிக்க அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
துணிகளின் வெண்மை மற்றும் தூய்மையைச் சரிபார்க்க அனைத்து எந்திரமயமாக்கப்பட்ட சலவையகங்களிலும் (Mechanised laundries) வைட்டோ-மீட்டர் பயன்படுத்தப்படுகின்றன. சலவைப் பணிகளைக் கண்காணிக்க அனைத்துச் சலவையகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. துணிகளில் உள்ள கரைகளைக் கண்டறியும் தானியங்கி ஏ.ஐ கேமரா தொழில்நுட்பம், மத்திய ரயில்வேயின் புனே கோட்டத்திலும், வடமேற்கு ரயில்வேயின் ஜெய்ப்பூர், ஜோத்பூர் கோட்டங்களிலும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் வசதியை மேம்படுத்த வடமேற்கு ரயில்வேயின் அனைத்து ஏசி ரயில்களிலும், ககாக்கியா – ஹவுரா இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலிலும் கம்பளி உறைகள் (Blanket covers) வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
படுக்கை விரிப்புகள் மற்றும் கம்பளிகள் எப்போது மாற்றப்படும்? படுக்கை விரிப்புகள், கம்பளிகள் மற்றும் பிற துணிப் பொருட்களின் ஆயுட்காலம் ரயில்வே விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அவற்றின் பயன்பாடு, நிலைமை மற்றும் தரத்தின் அடிப்படையில் இந்த விதிகள் அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டு புதியவை மாற்றப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
