– நமது நிருபர் –
சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களை, மீண்டும் திமுகவில் சேர்க்க, கட்சியின் தலைவர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன், முன்னாள் கவர்னர் ரவி, நடிகை குஷ்பு, நயன்தாரா, திரிஷாவை கொச்சையாகவும், அவதுாறாகவும் பேசிய சில பேச்சாளர்கள் மீது, திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியது.
அத்துடன் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய, ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, வட்ட செயலர்கள் மீதும், திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது.
சென்னை மேற்கு மாவட்ட திமுக, நிர்வாகிகளிடம் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக, ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள், பெண் கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட நிர்வாகிகளில் சிலர், தவெகவிற்கு ஓட்டம் பிடித்து விட்டனர். தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான 150 பேர், மீண்டும் தங்களை கட்சியில் சேர்க்கும்படி, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து காத்திருக்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக, அவர்கள் அனைவரும் தவெகவிற்கு ஓட்டம் பிடிக்காமல், திமுகவின் விசுவாசிகளாக இருந்து வருகின்றனர். எனவே, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளனர். அவரும், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களிடம், மன்னிப்பு கடிதம் பெற்று, கட்சியில் சேர்க்க பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
