சென்னை : ‘இ.டபிள்யூ.எஸ்., எனப்படும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்’ என, அண்ணா பல்கலை, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் விஜய்க்கு, அவர் எழுதிய கடிதம்:பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் வந்து, பல ஆண்டுகளாகி விட்டன. இதனால், இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத, பொதுப் பிரிவினர் பலன் பெறுவர். 10 சதவீத ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் யார் என்பதை, மத்திய அரசு வரையறை செய்துள்ளது.
கேரளா உட்பட 20 மாநிலங்கள், இந்த இடஒதுக்கீடை அமல்படுத்தி உள்ளன. ஆனால், சமூக நீதியில் முன்னணி மாநிலமான தமிழகம், இதை அமல்படுத்தாமல் இருப்பது விந்தையாக உள்ளது. சமூக சம நிலையின்மை, பொருளாதார சம நிலையின்மை ஆகிய இரண்டிலும், கவனம் செலுத்துவதே சமூக நீதி. பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் விடுபடுவது சரியல்ல.
ஜாதி அரசியலை சார்ந்த சில தலைவர்கள், தங்களின் ஓட்டு வங்கி அரசியலுக்காக, பொருளாதார இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர். இது துரதிருஷ்டவசமானது. எனவே, தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வை மாற்றி அமைப்பதில், இந்த நடவடிக்கை முக்கிய பங்காற்றும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
