மூணாறு: கேரளாவில் பெண் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு, சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘பசுமை பாதுகாவலர்’ எனும் திட்டத்தை சுற்றுலாதுறை செயல்படுத்த உள்ளது. இதில் பெண் சுற்றுலா வழிகாட்டிகளை நியமிக்க ஏற்பாடு நடக்கிறது.
அத்திட்டம் மாநிலத்தில் 20 சுற்றுலா மையங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக மூணாறு, கோவளம், போர்ட் கொச்சி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் பெண் சுற்றுலா வழிகாட்டிகள், பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவார்கள். பசுமை பாதுகாவலர்களாக தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு சுற்றுலா துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படும். திட்டத்தின் மூலம் பெண்கள் தலைமையில் சுற்றுலா முன் ஏற்பாடு, பெண்களுக்கான தங்கும் விடுதி, பொறுப்பான சுற்றுலா திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
நோக்கம்: சுற்றுலா பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதாரத்தை பேணுதல், பயணிகளிடையே பொறுப்பான நடத்தையை வளர்த்தல் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் அளவில் பெண்களின் பொருளாதார மேம்பாடு, வேலை வாய்ப்பு, பெண்கள் கை வண்ணத்தில் கலாச்சார சுற்றுலா, பெண்களுக்கான சாகச பயணம், டிரக்கிங், உணவு தயாரிப்பில் பெண்களுக்கு முன்னுரிமை ஆகியவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
