ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வணிகவரி அலுவலர் கைது

ஓசூர்: ஓசூர் தொழிலதிபர் நம்பி, 75, என்பவரிடம், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற, வணிக வரித்துறை மாநில வரி அலுவலர் கலையரசன், 48, கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மூக்கண்டப்பள்ளி எம்.எம்., நகரை சேர்ந்தவர் நம்பி, 75. ஓசூர், ஜூஜூவாடி துர்கா நகரில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், தன் நிறுவனத்திற்கு வர வேண்டிய, 10 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி., தொகையை திரும்ப பெற விண்ணப்பித்தார்.

இதை பரிசீலனை செய்ய, ஓசூர் சீத்தாராம் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலக மாநில வரி அலுவலர் கலையரசன், மொத்த தொகையில், 20 சதவீதம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

‘அவ்வளவு தொகை தர முடியாது’ என, நம்பி கூற, கடைசியாக, கலையரசன், 10 சதவீதம் கேட்கவே, கொடுக்க விரும்பாத நம்பி, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் செய்தார். அவரிடம் ரசாயனம் தடவிய, 1 லட்சம் ரூபாயை போலீசார் கொடுத்தனுப்பினர்.

அலுவலகத்தில் இருந்த கலையரசனிடம், நேற்று மாலை பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார், கலையரசனை கையும், களவுமாக கைது செய்தனர். கலையரசனுக்கு சேலம், சூரமங்கலம் சொந்த ஊர். அவரது வீட்டிலும் போலீசார் நேற்றிரவு சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

Source link