சென்னை: மத்திய அரசு நிதி அளித்தும், சொத்துக்களுக்கு தனித்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகம் உட்பட ஆறு மாநிலங்கள் மவுனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுதும், சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற, மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
நடவடிக்கை
அதன்படி, கிராம வாரியாக சொத்துக்கள் குறித்த, டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அத்துடன் சொத்து குறித்த உரிமை ஆவண விபரங்களையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு சொத்துக்கும் பிரத்யேக எண்ணுடன், அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள், மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாததால், பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்காக நாடு முழுதும் மொத்தம் உள்ள, 3.38 லட்சம் கிராமங்களில், 3.30 லட்சம் கிராமங்களுக்கு, டிஜிட்டல் வரைபடம் தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் முறை இதில், 1.97 கிராமங்களில், 3.24 கோடி சொத்துக்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா, உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள், அடையாள அட்டை வழங்குவதில் இறுதி கட்டத்தில் உள்ளன.
ஆனால், தமிழகம், தெலுங்கானா, கேரளா, சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில், சொத்துக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன.
இதில், தமிழகத்தில் தான் சொத்து ஆவணங்கள், அதிக அளவில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால், தனித்த அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன.
முந்தைய அரசுகள், இதில் உரிய கொள்கை முடிவு எடுக்காததால், அடையாள அட்டை வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன. தற்போது வந்துள்ள புதிய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
