சென்னை : “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, முதல்வர் விஜய் ஆர்வமுடன் இருக்கிறார்,” என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை, முதல் காட்சியிலேயே பார்த்து விட்டேன். உலக சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம். இது, பலருக்கு பாடமாகவும், ஒரு புதிய பாதையை வகுப்பதாகவும் உள்ளது. இறைவன் அருளால், தமிழகத்தில் ஊழல் இல்லாத, நேர்மையான, நல்லாட்சி வந்துள்ளது.
சிறு, குறு, தொழில் நிறுவனங்கள், எங்கெல்லாம் முடங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கவனித்து வருகிறோம். அவற்றை சரி செய்வது நம் கடமை. தொழில் துறையில் பெரிய திட்டங்களை, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்பார்க்கலாம்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆர்வமாக இருந்தவர், எம்.ஜி.ஆர்., ‘நிதி சுமை வரும்’ என நாங்கள் கூறினாலும் அவர் கேட்க மாட்டார். அதேபோல், திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வர் விஜய் ஆர்வமாக இருக்கிறார்.
‘சட்டியில் என்ன இருக்கிறது’ என பார்த்து விட்டார். அதை நிரப்புவதற்கான வேலைகளை, செய்து வருகிறார். நிச்சயமாக அள்ளிக் கொடுப்பார். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின், பேட்டியளித்த அவர், “ ஜனநாயகன் படம், ஏற்கனவே, தேதி அறிவிக்கப்பட்டு வெளியானது. இது, மாணவர்களை மூளை சலவை செய்யும் படம் அல்ல. மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கம் எங்களுக்கு இல்லை,” என்றார்.
