உலகில் உள்ள மிக அரிதான இயற்கை அதிசயங்களில் முதன்மையானது இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் அமைந்திருக்கும் கவா இஜென் (Kawa Ijen) எரிமலையாகும். வழக்கமாக அனைத்து எரிமலைகளும் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணத்தில்தான் கொதிக்கும் லாவாவை வெளியேற்றும். ஆனால், கவா இஜென் எரிமலை இரவில் ஒளிரும் நீல நிறத்தில் லாவா போன்ற சுடர்களைக் கக்கிப் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
இங்க இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப ரொம்ப ஹேப்பி… உலகின் டாப் நகரங்கள் இவைதான்!
வானம் மற்றும் நியான் விளக்குகளின் நிறத்தைப் போன்ற இந்த காட்சியானது, ஒரு அறிவியல் புனைகதைச் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்குத் தருகிறது. நேஷனல் ஜியோகிராஃபிக் தகவலின்படி, உலகில் மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த நீல நிற நெருப்பு நிகழ்வைக் காண்பதற்காகவே உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளும் சுற்றுலாப் பயணிகளும் இந்தோனேசியாவிற்கு வருகை தருகின்றனர்.
நீல நிறத்தில் எரிவது லாவாவா?
இந்த எரிமலை ஏன் நீல நிறத்தில் வழிகிறது என்பதற்கான தெளிவான விளக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) ஆய்வாளர்கள் அளித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, நீல நிறத்தில் வழிவது உண்மையில் லாவா கிடையாது; அது அதிக வெப்பத்தில் எரியும் கந்தக வாயுக்கள் ஆகும். எரிமலையின் பிளவுகளில் இருந்து 600 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில், கடும் அழுத்தத்துடன் இந்த கந்தக வாயுக்கள் வெளியேறுகின்றன.
இவை வெளிப்புறக் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் தொடர்ப்பு கொள்ளும்போது உடனடியாகத் தீப்பற்றி, 16 அடி உயரம் வரை நீல சுடர்களாக எழும்புகின்றன. இவ்வாறு எரியும் வாயுக்களின் ஒரு பகுதி திரவக் கந்தகமாக மாறி மலையின் சரிவுகளில் பாய்கிறது. இருள் சூழ்ந்த இரவில் இது நீல லாவா பாய்வது போன்ற பிரமையை உண்டாக்குகிறது.
2026-ன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள்
உலகின் பல எரிமலைகள் செயலிழந்துவிட்ட போதிலும், கவா இஜென் இன்றும் தீவிரமாக இயங்கி வருகிறது. 2026-ஆம் ஆண்டின் தற்போதைய சுற்றுலா மற்றும் நிலவியல் அறிக்கைகளின்படி, இது தொடர்ந்து வாயுக்களை வெளியிட்டு வருகிறது. இங்குள்ள நிலவியல் மாற்றங்களையும், சல்பர் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய நச்சு வாயுக்களின் அளவையும் நிலவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நச்சு வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி மலையேற்றத்திற்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்காக, 2026-ஆம் ஆண்டில் ‘தூய்மையான இஜென்’ என்ற சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.
60 மாடி கட்டிடத்தை விழுங்கும் அமில ஏரி
கவா இஜென் எரிமலையின் உச்சியில் நீலப்பச்சை நிறத்தில் அமைந்திருக்கும் ஏரி, உலகின் மிகப்பெரிய மற்றும் அதிதீவிர அமிலத்தன்மை கொண்ட ஏரியாகும். எரிமலையிலிருந்து வெளிவரும் ஹைட்ரஜன் குளோரைடு வாயு நீருடன் சேரும்போது வலிமையான ஹைட்ரோகுளோரிக் அமிலமாக மாறுவதே இதன் நீலப்பச்சை நிறத்திற்கு முக்கியக் காரணமாகும்.
இந்த அமில ஏரியின் பி.ஹெச் அளவு ஏறக்குறைய பூஜ்ஜியமாகும். சுமார் 36 மில்லியன் கன மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த ஏரிக்குள் ஒரு 60 மாடிக் கட்டிடத்தையே மூழ்கடிக்க முடியும். இதில் உள்ள அமில நீரைக் கொண்டு 14,000-க்கும் அதிகமான ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்ப முடியும். இத்தகைய அரிய புவியியல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் சிறப்புகள் காரணமாக, யுனெஸ்கோ அமைப்பு இதைத் தனது ‘உலகளாவிய புவிப்பூங்காக்கள் வலையமைப்பில்’ (UNESCO Global Geoparks) சேர்த்துள்ளது.
