தமிழக அரசின் மிக முக்கிய நிர்வாக மையமாக விளங்கும் சென்னை தலைமைச் செயலகம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேறொரு இடத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்த விவாதங்களும் தகவல்களும் தற்போது அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
நிர்வாக வசதி, கட்டடத்தின் இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பான ஆலோசனைகள் அவ்வப்போது எழுவது வழக்கம். இந்தச் சூழலில், விஜய் முதல்வரான பிறகு சட்டமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் மனுகொடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தலைமைச் செயலகத்தின் செயல்பாடுகள் தற்போதைய பாரம்பரியமிக்க ஜார்ஜ் கோட்டைப் பகுதியிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்படலாமா என்பது குறித்து பேச்சு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜார்ஜ் கோட்டை 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதால் அதில் புதிய கட்டுமானங்களை கட்டுவது சாத்தியமில்லை.
அரசின் கொள்கை முடிவுகள், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் அணுகுமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்த இடமாற்றம் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை நகருக்கு உள்ளேயும் புறநகரிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் தலைமைச் செயலகத்தை மாற்ற முயன்று முடியாத நிலையே இருந்துள்ளது.
முதலில் எம்ஜிஆர் திருச்சிக்கு தலைமைச் செயலகத்தை மாற்ற நினைத்தார். ஆனால் நிறைவேறாமல் போனது. அதேபோல் 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா, ராணிமேரி கல்லூரி அருகே புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில் எழுந்த எதிர்ப்புகளால் அதுவும் கைவிடப்பட்டது. தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு கலைஞர், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை ஓமந்தூரார் வளாகத்தில் கட்டி முடித்தார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் தலைமைச் செயலகம் மாற்றம் குறித்த பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
