நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னையில் பாலன் இல்லத்தில் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிகழ்வில் SFI, DYFI மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் பெருந்திரளாக பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் திரையுலகை சார்ந்த் பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
முன்னதாக நேற்றும் முன்தினம் சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், அமீர், அருண் மாதேஸ்வரன், நடிகை ஆண்ட்ரியா மற்றும் ராப் பாடகர் அறிவு என பலரும் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக பேசினார்கள். இதனை தொடர்ந்து பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திலும் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தியாகராயர் நகரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குனர் ராஜு முருகன் , இந்தியாவில் பாசிச அரசை புரட்டி போட்டு அடித்து கொண்டிருக்கின்ற கரப்பான் பூச்சிகளுக்கு வணக்கம் என தன்னுடைய பேச்சை துவங்கினார். இந்த மாலையில் ஒரு படத்துக்கு போய் ஃவைப் பண்ணி ரீல்ஸ் போட்டு, ஒரு ஜென்சி முகமாக நீங்கள் இருந்திருக்கலாம். ஆனால் இன்னொரு தலைமுறையின் போராட்டத்துக்காக இங்கு வந்து உட்கார்ந்து இருக்கிறீர்கள். அதற்காக என்னுடைய முதல் நன்றி என்றார்.
தொடர்ந்து 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு மாணவர்களுடைய அரசியல் மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அவப்பெயரை நீக்கிட்டு, இன்னைக்குன் இந்தியா முழுவதும் உங்களுடைய குரல் ஒலிக்கிறது. எவ்வளவு தூரம் என்றால், மணிப்பூரில் அவ்வளவு பேர் இறந்தப்பவும் வாய் திறக்காத பிரதமர், இன்னைக்கு வாய் திறந்து இருக்கிறார். ஃபேர் நீட்டெல்லாம் நம்முடைய கோரிக்கை கிடையாது. ஃபேன் நீட் தான் நம்முடைய குரல். இதனை இந்தியாவிலே பற்ற வைத்தது தமிழ்நாடு தான் என்று பேசினார்.
மேலும் கல்வியை பொது சொத்தாக்க வேண்டும் என்ற நிலைக்கு இது போய் நிற்க வேண்டும் என்றார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒரு அரசு உள்ளது. இதுவரைக்கும் நீட் எதிர்ப்பு நீட் எதிர்ப்பு என்று பேசி வந்தவர்கள், இன்னைக்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டம் நடந்துங்க என்கிறார்கள். நான் என்ன சொல்றேன் என்றால், மாநில அரசு நீங்களும் வாங்க போராடுங்க. தெருவில் இறங்கி போராடுவோம். நாம எல்லாரும் ஒன்றிய அரசையும், பாசிசத்தையும் எதிர்த்து குரல் கொடுக்க போகிறோம்.
இப்போ நீங்க பாசிசமா, பாயசமா என்று முடிவு பண்ணக்கூடிய நேரம் என தவெக அரசை போராட்டத்துக்கு அழைப்பு கொடுத்து பேசினார் இயக்குனர் ராஜு முருகன் . மேலும், எல்லாரும் சேர்ந்து நீட்டை எதிர்த்து போராடுவோம். எனக்கு ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிய ஈர்ப்பு எல்லாம் கொடுக்கவில்லை. அது நல்ல விஷயம் தான். ஆனால் இப்போ நீங்க வந்து இருப்பது உண்மையான போராட்டம். ஏனென்றால் இது பல தலைமுறைக்கான போராட்டம்.
நம்முடைய கல்வியை பிடுங்கி கொள்வதற்கான ஒரு வேலை நடந்து வருகிறது. அதற்கு எதிரான போராட்டமாக தான் இதை நான் பார்க்கிறேன். எங்களுடைய எல்லா பிள்ளைகளுக்கும் கல்வி வர வேண்டும். அதற்கு பெரு முதலாளிகளிடம் இருந்து கல்வியை பிடுங்கி, பொதுச்சொத்தாக மாற வேண்டும். இவ்வாறு இயக்குனர் ராஜு முருகன் பேசியுள்ளது தற்போது சோஷியல் மீடியாவில் பெருமளவில் கவனம் பெற்று கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
