சமீபத்தில் நடந்த நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சி.ஜே.பி அமைப்பின் இளைஞர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்குத் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஜோதிகா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நான் எப்போதும் மாணவர்களுடனும், நமது தேசத்தின் எதிர்காலத்துடனும், பொறுப்புக்கூறலுடனும் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளார். ஒரு ஜனநாயக இந்தியாவிற்கும், சீர்திருத்தப்பட்ட கல்வி முறைக்கும் தான் ஆதரவாக நிற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லியில் களத்தில் நின்று போராடி வரும் சோனம் வாங்சுக், அபிஜித் தீப்கே மற்றும் சவ்ரவ் தாஸ் ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
“ஒரு தாயாக, எங்களது பிள்ளைகளும் அபிஜித், சவ்ரவ் போல துணிச்சலாக வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”. எந்தவிதத் தயக்கமும் இன்றி தங்களது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசும் இந்த Gen-Z தலைமுறை இளைஞர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘நாம்தான் இந்தியா’ என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். எங்களை எதற்கும் அஞ்சாதவர்களாக மாற்றியதற்கும், அழுத்தங்களை உடைத்தெறிந்ததற்கும் நன்றி எனத் தனது பதிவை ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்துடன் ஜோதிகா நிறைவு செய்துள்ளார்.
