வெறும் 7 நிமிஷம், ரூ.800 கோடி நகைகள் அவுட்… மணி ஹெய்ஸ்ட்டையே மிஞ்சிட்டாங்க; மாறும் லூவ்ரே அருங்காட்சியகம்

கடந்த ஆண்டு அக்டோபர் 19 அன்று, உலகையே உலுக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு துணிச்சலான திருட்டுச் சம்பவம் பாரிஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் வெறும் 7 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தத் திருட்டின் போது லூவ்ரேயின் புகழ்பெற்ற ‘அப்போலோ கேலரி’ (Apollo Gallery) இலக்கு வைக்கப்பட்டு, அங்கிருந்த அரச குடும்பத்து அரிய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்தியா மாதிரி ஸ்பெயின் டீ கடையிலும் காசே இல்லாமல்; கால் மேல் கால் போட்டு ராஜா பகதூர் மாதிரி இருக்கலாம்… எப்படி தெரியுமா?

சுமார் 88 மில்லியன் யூரோ, இந்திய மதிப்பில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நகைகள் காணாமல் போய் 9 மாதங்களுக்கும் மேலாகிய நிலையில், அப்போலோ கேலரி தற்போது மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. காணாமல் போன நகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அரச நகைகள் இல்லாத கேலரி

தங்க முலாம் பூசப்பட்ட கூரையுடன் கூடிய அந்த அறை முன்பு போல கம்பீரமாகத் தோற்றமளித்தாலும், அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரச குடும்பத்து நகைகள் எதுவும் இப்போது அங்கு இல்லை. கேலரியில் இருந்த மற்ற பொருட்கள் அனைத்தும் லூவ்ரே அருங்காட்சியகத்தின் பிற பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்துப் பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் கேத்தரின் பேகார்ட் கூறியதாவது, 
“அந்தக் கொடூரமான நாளில், நம் வரலாற்றின் சின்னமான பொருட்கள் திருடப்பட்டதை யாரும் மறந்துவிட முடியாது, அதை மறக்கவும் கூடாது. உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் அதிர்ச்சியையும் துயரத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளிப்படுத்திய ஒரு பேரதிர்ச்சி அது. அசைக்க முடியாதது என்று நாம் நினைத்த ஒரு இடம் எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்ந்த தருணம் அது” என்று தெரிவித்தார்.

 7 நிமிடத்தில் நடந்த துணிச்சலான கொள்ளை

அப்போலோ கேலரி அருங்காட்சியகத்தின் மேல் தளத்தில் அமைந்திருந்தது. கொள்ளையர்கள் மிகச் கச்சிதமாகத் திட்டமிட்டு, உயர் பாதுகாப்பு கொண்ட இரண்டு கண்ணாடிப் பேழைகளை உடைத்து 9 அரிய பொருட்களைத் திருடிச் சென்றனர்.

எப்படி நுழைந்தார்கள்?

சீன் நதியை (River Seine) நோக்கியிருந்த பால்கனி வழியாக உள்ளே நுழைய, வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒரு மெக்கானிக்கல் லிஃப்ட்டை கொள்ளையர்கள் பயன்படுத்தினர். மின்சாரக் கருவிகள் மூலம் ஜன்னலை அறுத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அவர்கள், கேலரிக்குள் வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டனர். பின்னர் வெளியே தயாராக இருந்த ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர்.

திருடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நகைகளின் பட்டியல்

  • நெப்போலியன் III-ன் மனைவி பேரரசி யூஜெனியின் (Empress Eugénie) கிரீடம் மற்றும் ப்ரூச் (Brooch).
  • பேரரசி மேரி லூயிஸின் (Empress Marie Louise) மரக்கத நெக்லஸ் மற்றும் காதணிகள்.
  • ராணி மேரி – அமேலி மற்றும் ராணி ஹோர்டென்ஸுக்குச் சொந்தமான சஃபையர் (Sapphire) செட்டின் கிரீடம், நெக்லஸ் மற்றும் ஒரு காதணி.
  • “ரிலிகவரி ப்ரூச்” (Reliquary Brooch) எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபரணம்.
  • கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது கைநழுவி விழுந்ததால் சேதமடைந்த பேரரசி யூஜெனியின் ஒரு கிரீடத்தை மட்டும் விட்டுச் சென்றிருந்தனர்.

லூவ்ரே அருங்காட்சியகத்தின் சுவாரஸ்ய வரலாறு – எதிர்காலத் திட்டம்

12-ஆம் நூற்றாண்டில் மன்னர் இரண்டாம் பிலிப் கட்டிய கோட்டையின் இடத்தில், 1546-ஆம் ஆண்டில் மன்னர் முதலாம் பிரான்சிஸால் லூவ்ரே அரண்மனை கட்டத் தொடங்கப்பட்டது. 1682-ல் மன்னர் பதினான்காம் லூயிஸ் தனது அரசவையை வெர்சாய்ஸ்க்கு (Versailles) மாற்றிய பிறகு லூவ்ரேவின் முக்கியத்துவம் குறைந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, ஆகஸ்ட் 10, 1793 அன்று இது அதிகாரப்பூர்வமாகப் பொது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

800 மில்லியன் யூரோ மறுசீரமைப்பு

இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை பலப்படுத்த 800 மில்லியன் யூரோ மதிப்பிலான ‘Louvre New Renaissance’ திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்புகள் நவீனமாக்கப்பட்டு, 2031-க்குள் உலகப் புகழ்பெற்ற ‘மோனா லிசா’ ஓவியத்திற்கு எனத் தனி கேலரி அமைக்கப்படவுள்ளது.

Source link