தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் நன்மைக்கு பயன்படுத்தப்பட்டாலும் சிலரால், தீமைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், மார்ப்பிங் புகைப்படங்களை உருவாக்குவதற்கும் தொழில்நுட்பம் தகவறாக பயன்படுத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
அந்த வகையில், போஜ்புரி திரைப்பட நடிகை அஞ்சனா சிங், தன்னையும் தனது 11 வயது மகளையும் சித்தரிக்கும் ஆபாசமான செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டி, லக்னோவில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் (Cyber Crime Wing) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில், கடந்த சில நாட்களாக தன்னையும் தனது மகளையும் அவதூறாக சித்தரிக்கும் ஏஐ உருவாக்கிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருவதாக அஞ்சனா சிங் தெரிவித்தார். மேலும், அந்த பதிவுகளுடன் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதோடு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “லக்னோவுக்கு வரக்கூடாது என்று எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போஜ்புரி நடிகரும் பாடகருமான கேசரி லால் யாதவின் மேலாளர் அகிலேஷ் காஷ்யப் என்னை குறிவைத்து இந்த உள்ளடக்கங்களை உருவாக்கி பரப்புவதில் தொடர்புடையவர். அவருடைய குழுவினர் என்னையும் என் 11 வயது மகளையும் பற்றி அவதூறாக பாடல்களையும் உருவாக்கியுள்ளனர். இது குறித்து எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளேன்,” என்றார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஞ்சனா சிங் வலியுறுத்தியுள்ளார். “நான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண். உத்தரப் பிரதேச அரசின் மீதும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
எப்.ஐ.ஆரில், “என்னை எதிர்த்து திட்டமிட்டு சதித்திட்டம் தீட்டி, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஆபாசமான, தரக்குறைவான மற்றும் அவதூறான பதிவுகள் வெளியிடப்படுகின்றன. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்ட ஆபாச புகைப்படங்கள் வெளியிடப்பட்டதுடன், குற்றவியல் மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் சைபர் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேசரி லால் யாதவ் அல்லது அவரது தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை.
