பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களில் பாதி அளவு பேர், எதிர்காலத்தில் தங்களின் சொந்த நாட்டை விட்டு வேறு ஏதேனும் ஒரு நாட்டில் குடியேற விரும்புவதாக ஒரு புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனமான ‘Feather’ சார்பில், ஒவ்வொரு நாட்டிலும் தலா 500 பேர் வீதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடு செல்ல விரும்புவதற்கு முக்கியக் காரணம் என்ன?
மக்களைச் சொந்த நாட்டை விட்டு வெளியேறத் தூண்டும் முதன்மை காரணியாக ‘வாழ்க்கைச் செலவின உயர்வு’ மட்டுமே உள்ளது.
இங்கிலாந்து மக்கள் – 53%
பிரெஞ்சு மக்கள் – 48%
ஜெர்மனி மக்கள் – 43%
இத்தாலி மக்கள் – 32%
ஆய்வில் பங்கேற்றவர்களில் 10-ல் ஒருவர் மட்டுமே “நான் நிச்சயமாக வெளிநாடுகளுக்குச் செல்ல மாட்டேன்” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பியர்களின் முதன்மைத் தேர்வு ‘ஸ்பெயின்’
மக்கள் செல்ல விரும்பும் நாடுகள் மாறுபட்டாலும், அனைத்து நாடுகளின் மக்களாலும் அதிகம் விரும்பப்படும் நாடாக ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து (24%) மற்றும் இத்தாலி (20%) மக்களின் முதல் தேர்வாக ஸ்பெயின் உள்ளது.
பிரான்ஸ் (16%) மற்றும் ஜெர்மனி (12%) மக்களின் இரண்டாவது தேர்வாகவும் ஸ்பெயின் உள்ளது.
பிற நாடுகளின் விருப்பப் பட்டியல்
கனடாவை 17% பிரான்ஸ் மக்கள் முதல் தேர்வாகவும், இத்தாலியை 14% பேர் இரண்டாவது தேர்வாகவும் வைத்துள்ளனர்.
ஜெர்மனி மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆஸ்திரியா (17%), ஸ்பெயின் (12%), சுவிட்சர்லாந்து (12%) போன்ற நாடுகளையே தேர்வு செய்கின்றனர்.
இங்கிலாந்து மக்கள், ஆஸ்திரேலியா (19%), கனடா (15%), மற்றும் நியூசிலாந்து (10%) போன்ற தொலைதூர நாடுகளுக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர்.
புதிய கலாச்சாரம்
இந்த ஆய்வில் கருத்து தெரிவித்துள்ள பயணத்துறை நிபுணர் ஹோலி ரூபன்ஸ்டீன், பாரம்பரிய வெளிநாட்டு வாழ்க்கை முறை தற்போது மாறிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார். “ஒரே நாட்டில் நிரந்தரமாகக் குடியேறி வாழ்வது என்ற பழைய முறை மறைந்து வருகிறது. அதற்குப் பதிலாக, ஒரு இடத்தில் 6 மாதம் தங்குவது, அங்கு இருந்தபடியே ரிமோட் வேலை செய்வது, புதிய வாழ்க்கை முறையைச் சோதித்துப் பார்ப்பது போன்ற நெகிழ்வான கலாச்சாரம் உருவாகி வருகிறது” என்றார்.
