கிராமத்து மருத்துவரில் இருந்து மக்கள் தலைவராக :
திண்டிவனத்தில் ஒரு சிறிய கிளினிக் அமைத்து, மிகக் குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து தனது பொது வாழ்வைத் தொடங்கியவர் மருத்துவர் ராமதாஸ். நோயாளிகளிடம் மருத்துவ கட்டணத்தை ஒரு சிறிய டப்பாவில் போட சொல்லி, அதில் வரும் சொற்ப தொகையைக் கொண்டு தேநீர் வாங்கி வந்து விருந்தின உபசரிப்பு செய்யும் அளவிற்கு எளிய பின்னணியை கொண்டவராக திகழ்ந்தார்.
வன்னிய சமூக மக்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் வன்னியர் சங்கப் பொறுப்பை ஏற்ற ராமதாஸ், 1989-இல் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கி தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
‘குடிதாங்கிக் கொண்டான்’ முதல் பா.ம.க-வின் மகுடம் வரை
தேர்தல் வெற்றிகளை தாண்டி சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு இயங்கிய ராமதாஸ், ஆரம்பக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
குறிப்பாக 1980களின் இறுதியில், ‘குடிதாங்கி’ கிராமத்தில் பட்டியல் இனத்தவரின் உடலை வன்னியர்கள் வாழும் வீதி வழியாகக் கொண்டு செல்ல எழுந்த எதிர்ப்பை மீறி, தானே அந்த உடலை எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்ய வழிவகுத்தார்.
