அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி போராட்டம் நடத்த முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்களை காவல்துறையினரும் துணை ராணுவப் படையும் தடியடி, புகை குண்டு ஆகியவை மூலம் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததால், அது ஒன்றிய அரசுக்கு நெருக்கடியாக மாறியது. இதையடுத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து கரப்பான்பூச்சி கட்சியினர் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் போராட்டம் வெளிநாட்டு சதி என பா.ஜ.க நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று (25-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “நீட் தேர்வு என்பது அவசியமானது. காவல்துறையில் சேர வேண்டுமென்றால் கூட தகுதி இருக்கிறதா? இல்லையா என்பதை சோதனை செய்கிறார்கள். அது மாதிரி நீட் தேர்வு மூலம் யாருக்கும் பணம் கொடுக்காமல் நேரடியாக கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போராட்டம் எதற்கு என்று எனக்கு புரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது 13 முறை லீக் ஆகியிருக்கிறது. அதன் பிறகு விசாரணை செய்தார்கள், வழக்கு போட்டார்கள். இது நடக்காத சம்பவம் கிடையாது. ஆனால், இது நடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. லீக் ஆன பிறகு உடனடியாக 13 பேரை கைது செய்திருக்கிறார்கள். ஜூனில் மீண்டும் மறுதேர்வு நடந்திருக்கிறது.
தேர்வு இருக்கக் கூடாது சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. இந்த போராட்டம் வெளிநாட்டு சதி, இந்த சதிக்கு உட்பட்டு இளைஞர்கள் சென்று விடக்கூடாது. எதற்காக இந்த போராட்டம் நடக்கிறது என்பதை இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியா பொருளாதார அடிப்படையில் உயர்ந்து கொண்டிருக்கும் போது இதை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ என்ற ஐயப்பாடு தான் வருகிறது. இது போன்ற செயல்கள் இந்த நாட்டை சீர்குழைப்பதற்கான செய்யப்படுகின்ற சதி” என்று கூறினார்.
