புதுடில்லி: மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, டில்லியில் 36 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுவதாக சிஜேபி இயக்கம் அறிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஜேபி எனப்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கத்தினர், டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் 36வது நாளை எட்டிய நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் இன்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் சிஜேபி இயக்கத்தினர் இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோருடன் சிஜேபி இயக்கத்தைச் சேர்ந்த சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் சிஜேபி இயக்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, சவுரவ் தாஸ் கூறியதாவது; நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனால், சிஜேபி நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுகிறோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். இன்னும் 4 வாரங்களுக்குள் மத்திய அரசுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
