அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி போராட்டம் நடத்த முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்களை காவல்துறையினரும் துணை ராணுவப் படையும் தடியடி, புகை குண்டு ஆகியவை மூலம் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததால், அது ஒன்றிய அரசுக்கு நெருக்கடியாக மாறியது. இதையடுத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து கரப்பான்பூச்சி கட்சியினர் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி – மத்திய அமைச்சர்கள் இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (25-07-26) நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் விடுத்த இரண்டு கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்பாதாக மத்திய அமைச்சர்களான ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து இரு தரப்பினரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் தெரிவித்ததாதது, “நாங்கள் அரசுப் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். பல நாட்களாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த எங்கள் போராட்டத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகள் இருந்தன: தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், போராட்டக்காரர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும், மேலும் போராட்டக்காரர்கள் அல்லது அமைப்பாளர்கள் மீது எதிர்காலத்தில் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படக்கூடாது. எங்கள் மூன்றாவது கோரிக்கை, நீட் தேர்வு நடத்தப்படாததால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது. சற்று முன்புதான் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதன் மூலம் எங்கள் முதல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
டெல்லியில் மட்டுமல்லாமல், பாஜக ஆளும் மற்றும் பாஜக கூட்டணி மாநிலங்கள் அனைத்திலும் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் இரண்டாவது கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களையும் பகிர்ந்து கொள்வதாக அரசு எங்களுக்கு உறுதியளித்துள்ளது. நீட் தேர்வில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்கு அரசு ஒப்புக்கொண்டுள்ளதுடன், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி அந்த குடும்பங்களுக்கு கௌரவ இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது தவிர, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஐந்து அம்ச கோரிக்கை மனு ஒன்றையும் நாங்கள் அரசிடம் சமர்ப்பித்தோம். பரந்த சீர்திருத்தங்களுக்காக இணைந்து செயல்படும் வகையில், அந்த கோரிக்கை மனு தொடர்பாக சுமார் நான்கு வாரங்களில் நாங்கள் மீண்டும் அரசை சந்திப்போம். இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் அரசுக்கு ஏற்புடையதாக இருந்தால், போராட்டத்தையும் வாபஸ் பெற விரும்புகிறோம்.
ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படும் என்ற புரிதலுடன், நல்லெண்ணத்தின் அடிப்படையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிக்கிறது. நமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன, எனவே போராட்டக்காரர்கள் உடனடியாகப் பின்வாங்கி அமைதியாக வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களின் எதிர்காலத் திட்டம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிப்போம். ஆனால், போராட்டக்காரர்கள் உடனடியாகப் பின்வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிவித்தனர். இதன் மூலம், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். போராட்டம் வாபஸ் பெற்றதை அடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் 35 நாட்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் நிறைவு பெற்றது.
