ஐஎஸ்ஓ சான்று கிடைத்தது குறித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறுகையில், “தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளிகள் ஒன்றும் சளைத்தவை கிடையாது. தனியார் பள்ளிகளில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் எங்கள் பள்ளியிலும் இருக்க வேண்டும் என்பதை நாங்ஙள் லட்சியமாக ஏற்றுக் கொண்டோம்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், டிஜிட்டல் நூலகம், ஸ்மார்ட் போர்டு, உயர்தரமான வகுப்பறைகள், தரமான இருக்கைகள் மற்றும் சுகாதாரமான கழிவறை என அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தோம்.
பள்ளியின் தரம் மேம்படுத்தப்பட்ட பிறகு, முன்னாள் மாணவர்கள் ஐஎஸ்ஓ தரச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுரைத்தனர். இதன்படி பள்ளி சார்பாக விண்ணப்பித்ததும், மூன்று முறை ஐஎஸ்ஓ அதிகாரிகள் எங்கள் பள்ளியை வந்து ஆய்வு செய்த பிறகே, ஐஎஸ்ஓ தரச் சான்றை வழங்கினர்.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கூட்டு முயற்சியே இந்த பள்ளியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்” என ஆசிரியர்கள் கூறினர்.
