கடந்த கால அரசுகளின் ஆட்சிக்காலத்தில், ஏற்பட்ட மாநிலத்தின் மொத்த கடன் சுமை 10 லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது. இந்த கடன் சுமை புதிய அரசாங்கத்திற்கு மிகக் கடுமையான சவாலாக இருக்கும். மாநிலத்தின் நிதி நிலைமையை சீராக பராமரிப்பதுடன், முந்தைய ஆட்சிகளில் வாங்கிய கடன்களுக்கும் வட்டி கட்ட வேண்டிய அவசியம் புதிய அரசாங்கத்திற்கும் உண்டு. இதனால் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் வண்ணம் இல்லாமல் கூடுமான அளவு, கடன்களை குறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்த, அதற்கு உண்டான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. பொதுவாகவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை எந்த தடையும் இன்றி நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமைக்கப்பட உள்ளது. கல்வி ,மருத்துவம், பொது சுகாதாரம், விவசாயம் , உட்கட்டமைப்பு ஆகியோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் புதிய கட்டிடங்கள், சாலைகள், மற்றும் பாலங்கள் ஆகியவற்றை அமைக்கும் போது, ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் அவை முற்றிலும் களையப்பட உள்ளன. பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு முழு சுதந்திரம் முதல்வர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
