“மெரினா.. மெரினா…” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக இளைஞர்கள் கோஷம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தினர். கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி போராட்டம் நடத்த முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்களை காவல்துறையினரும் துணை ராணுவப் படையும் தடியடி, புகை குண்டு ஆகியவை மூலம் கடும் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இந்த தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (25-07-26) கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு வருகை தந்து இளைஞர்களின் போராட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அங்கு அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, மெரினா கடற்கரை மூடலைக் கண்டித்து தவெக அரசுக்கு எதிராக, ‘மெரினா… மெரினா’ என இளைஞர்கள் முழக்கமிட்டு அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அமைச்சர் ராஜ்மோகன், “தோழர்களுடைய குரல் எங்களுக்கு கேட்கிறது. மெரினா கடற்கரை மட்டுமல்ல..’ என பேசும் போது அங்கிருந்த இளைஞர்கள் அவரை பேசவிடாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இருப்பினும் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “போராட்டத்தில் எந்த சலசலப்பும் இல்லை. இது உங்கள் போராட்டம். நீங்கள் சாதாரண கரப்பான்பூச்சிகள் கிடையாது, மெல்ல மெல்ல அரிக்கும் கரப்பான்பூச்சிகள். இது குறித்து இடம், காலம் என அனைத்து முடிவுகளும் நீங்களே எடுங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்” என்று கூறினார். 

Source link