புதுடில்லி; நாடு முழுவதும் பிரீமியம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு லிட்டருக்கு ரூ.2.35 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் மேற்கொண்டுள்ள போர், இப்போது உலக நாடுகளை மெல்ல, மெல்ல பாதிக்கும் சூழல் உருவாகி வருகிறது. வளைகுடா நாடுகளை நோக்கிய ஈரானின் போர் நடவடிக்கை, கச்சா எண்ணெய் வினியோகத்தில் கடும் பாதிப்பும், உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
இந்தியாவில் எல்பிஜி வினியோகத்தில் நெருக்கடியும் காணப்பட, அதன் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய அரசும் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போர்ச் சூழலுக்கு மத்தியில்., தற்போது நாடு முழுவதும் பிரிமீயம் பெட்ரோல் விலையை ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ஹெச்பிசிஎல், பிபிசிஎல், இந்தியன் ஆயில் நிறுவனங்கள் தங்களின் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்கின்றன. இன்று முதலே இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் பவர் பெட்ரோல், பிபிசிஎல் நிறுவனத்தின் ஸ்பீ டு பெட்ரோல், ஐஓசிஎல் நிறுவனத்தின் ஹெச்பி 95 பெட்ரோல் விலையானது ரூ.2.09ல் இருந்து ரூ..2.35 வரை அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வானது வெகுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வழக்கமான மற்றும் சாதாரண வகை பெட்ரோலுக்கு பொருந்தாது. விலை உயர்வு குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது;
விலை உயர்வு குறித்து கூறவேண்டும் என்றார்ல், சாதாரண பெட்ரோல் விலையில் எவ்வித உயர்வும் இல்லை. பிரீமியம் வகை பெட்ரோல்களில் மட்டுமே சற்று விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. அதுவும் நாள்தோறும் விற்பனையாகும் மொத்த பெட்ரோலில் வெறும் 2 முதல் 4 சதவீதம் மட்டுமே ஆகும்.
எல்பிஜியில் இருந்து பிஎன்ஜிக்கு கிட்டத்தட்ட 7500 நுகர்வோர்கள் மாறி உள்ளனர். போர் காரணமாக தற்போதுள்ள நிலை மேலும் கவலை அளிப்பதாகவே இருக்கிறது. வினியோகஸ்தர்களிடம் தட்டுப்பாடு இருப்பதாக எங்களுக்கு எந்த விவரமும் பதிவாகவில்லை. தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பீதியின் காரணமாக முன்பதிவு செய்வது குறைந்துள்ளது. நேற்று மட்டும் 55 லட்சம் முன்பதிவு கோரிக்கைகளை பெற்றுள்ளோம்.
எல்பிஜி சிலிண்டர் வினியோகம் இயல்பாகவே இருக்கிறது. 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வர்த்தக எல்பிஜிக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வெளியிட்டு இருக்கின்றன. ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 11300 டன் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்கள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களில் சிலிண்டர்கள் போதிய அளவு இருப்பும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து, தொழில்துறையினிருக்கான பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன. அதன்படி, தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கப்படும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.67 என்பதில் இருந்து ரூ.109.59 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
