எல்லாருக்கும் பென்ஷன் திட்டம் வருதா? நாடாளுமன்றத்தில் அரசு சொன்ன முக்கிய தகவல்

முதியோர், குறிப்பாக ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாழும் பெண்களுக்கு அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துமா என்ற கேள்வி மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, அத்தகைய திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஜூலை 23, 2026 அன்று மாநிலங்களவையில் எம்.பி. ஆர். கிரிராஜன், முதியோர், குறிப்பாக ஆதரவற்ற பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டம் (Minimum Pension Scheme for All) கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா என்று கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து ஏதேனும் திட்டம் உள்ளதா என்பதையும் கேட்டார்.

மத்திய அரசு என்ன பதிலளித்தது?

இதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, சமூகப் பாதுகாப்பு சட்டம், 2020 (Code on Social Security, 2020) குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

இந்தச் சட்டத்தின் மூலம் ஒழுங்கற்ற துறையில் பணிபுரிபவர்கள், கிக் (Gig) தொழிலாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் (Platform) தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நலன்களை வழங்கும் நோக்கம் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ்:

*நலத்திட்டங்களுக்கு நிதி வழங்க சமூகப் பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும்.

*சட்டத்தின் 113-வது பிரிவின் கீழ் ஒழுங்கற்ற துறை, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படுவர்.

*இதன் மூலம் அவர்கள் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

இ.பி.எஸ். ஓய்வூதிய நிதி எப்படி செயல்படுகிறது?

ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் (EPS), 2026 குறித்து அமைச்சர் கூறியதாவது:

இ.பி.எஸ். என்பது ஒரு கூட்டு ஓய்வூதிய நிதி (Pooled Fund) ஆகும். இதில் முதலாளிகளின் பங்களிப்பும், மத்திய அரசின் பங்களிப்பும் சேர்க்கப்படுகின்றன. தகுதியான ஊழியர் அல்லது அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தால், அந்த நிதியிலிருந்து ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படுகின்றன.

இ.பி.எஸ். பலன்களை கோர காலக்கெடு உள்ளதா?

இ.பி.எஸ். திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய அல்லது பிற பலன்களை பெற விண்ணப்பிக்க எந்த காலக்கெடும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் ஓய்வூதியத் தொகை, திரும்பப்பெறும் பலன்கள், நிலுவைத் தொகைகள் (Arrears) அனைத்தும் உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

செயல்படாமல் இருக்கும் இ.பி.எஃப். கணக்குகளில் உள்ள தொகை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், 2026 மார்ச் 31 நிலவரப்படி செயல்படாத EPF கணக்குகளில் ரூ.9,330.56 கோடி இருப்பதாக தெரிவித்தார். இந்தத் தொகை, இ.பி.எஃப். திட்டம் 1952-இன் விதி 72(6) (தற்போது EPF திட்டம் 2026-இன் விதி 55) கீழ் செயல்படாத கணக்குகளில் உள்ளதாகவும் அவர் விளக்கினார்.

Source link