புதுடில்லி: தெற்கு டில்லி, சத்தர்பூரில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது மற்றும் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, டில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி, சத்தர்பூர் அம்பேத்கர் காலனியில், சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க டில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 25) விசாரித்தது. இதைத் தொடர்ந்து, அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வேப்ப மரம், அரச மரம் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த, 28 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளதாக, மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல, வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சத்தர்பூரில் மரங்கள் வெட்டப்படுவது மற்றும் வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கையை, ஆறு வாரங்களுக்குள், டில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில், செப்டம்பர் 29ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
