புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், டில்லியில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் குறித்து அவதுாறு பரப்பியதாக, பாகிஸ்தானுடன் தொடர்புடைய, 400க்கும் மேற்பட்ட சமூக வலைதள கணக்குகளை கண்டறிந்து போலீசார் முடக்கினர். இந்த கணக்குகள் மூலம், போராட்டம் தொடர்பாக, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் போலி வீடியோக்கள் மூலம் மிகப் பெரிய வன்முறையை ஏற்படுத்த சதி செய்ததும் கண்டறியப்பட்டது.
‘நீட்’ எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த சில நாட்களாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கைவிட்டனர்.
இந்நிலையில், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக அவதுாறு பரப்பியதாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் தொடர்புடைய, 400க்கும் மேற்பட்ட சமூக வலைதள கணக்குகளை டில்லி போலீசார் முடக்கி உள்ளனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
போராட்டம் தொடர்பாக போலியான மற்றும் திசை திருப்பும் தகவல்களை பரப்பியதில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பல சமூக வலைதள கணக்குகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வகையில், அடையாளம் காணப்பட்ட, 400-க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் ஏராளமான போலி பதிவுகளும், வீடியோக்களும் பகிரப்பட்டுள்ளன. இந்த கணக்குகள், ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள், எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், ‘டீப் பேக்’ வீடியோக்களை பரப்பின. இதன் மூலம், போராட்டக் களத்தில் மிகப் பெரிய வன்முறையை உருவாக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின் போதும், இந்த கணக்குகளில் இருந்து போலி செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.
மக்கள் எதையும் நம்புவதற்கோ அல்லது பகிர்வதற்கு முன்பாக, பதிவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும். ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மத்திய அரசு மிகப்பெரிய ஒடுக்குமுறையை ஏவ தயாராகி வருவதாக அரசியல்வாதி ஒருவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவும் முற்றிலும் வதந்தி. அத்தகைய எந்த நடவடிக்கையும் திட்டமிடப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
