நான் எந்தக் கட்சியையும், எந்த அமைப்பையும் சேர்ந்தவள் அல்ல; மக்களில் ஒருவராகத்தான் கருத்துத் தெரிவித்து வருகிறேன் என்று நடிகை சனம் ஷெட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை புதுப்பேட்டை எல்.ஜி சாலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உட்படக் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வலியுறுத்தி, ‘VOICE2LAW’ என்ற தலைப்பில் சனிக்கிழமை (ஜூலை 25) பொது விழிப்புணர்வு அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் நடிகை சனம் ஷெட்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
முந்தைய நாள் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றது குறித்தும், அங்கு எழுந்த சர்ச்சைகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், அந்தப் போராட்டம் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் போராட்டம் என்று நினைத்தே நான் சென்றேன். அது ‘காக்ரோச் கட்சி’ முன்னெடுத்த போராட்டம் என்பது எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. அங்குச் சென்ற அரைமணி நேரத்திலேயே எனக்குச் சந்தேகம் எழுந்தது. மாணவர்களுக்கான போராட்டம் என்று கூறிவிட்டு, அங்கு பா.ஜ.க முர்தாபாத், இந்தியா ஜிந்தாபாத் என இந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் ‘சி.எம் விஜய் மிஸ்ஸிங்’ என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். விஜய் சார் மிஸ்ஸிங் என்றால் அதைப் பற்றி தனியாகப் பேசுங்கள்; பேசக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், மாணவர்களின் போராட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி மக்களின் மனதைக் கையாள முயல்கிறார்கள். என் மண்டையைக் கழுவி, அவர்கள் எதிர்பார்ப்பது போலப் பேசவைக்க நினைக்கிறார்களா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் பேசிய விதம் அதிகார தோரணையில் இருந்ததாகவும், போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்ததாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டதற்கு நான் பேசியதால் தான் அந்தப் போலிப் போராட்டம் சிதறியது. நான் அங்குச் சென்றபோது ‘நீங்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறீர்கள்; நாங்கள் சொல்வது போலத்தான் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்கான அனைத்து வீடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நான் பொய்யான குற்றச்சாட்டு வைப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களின் நேர்மையும் ஜனநாயகமும் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இன்றை பேரணியில் பங்கேற்றேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் செயல்படவில்லை, மக்களில் ஒருவராகவே பேசுகிறேன் என்று சனம் ஷெட்டி உறுதியாகத் தெரிவித்தார்.
