சத்தீஸ்கரில் பண மோசடி வழக்கு: தேர்வாணைய முன்னாள் தலைவர் கைது

ராய்பூர்: சத்தீஸ்கர் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் டாமன் சிங் சோன்வானி, 64, என்பவரை தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

சத்தீஸ்கரில், கடந்த 2018 முதல் 2023 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. கடந்த 2020 மற்றும் 2021ல், சத்தீஸ்கர் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்ததாகவும், சில தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இது குறித்து 2024ல் வழக்கு பதிந்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

முறைகேடுகள் நடந்த தாக கூறப்படும் காலத்தில், சத்தீஸ்கர் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த டாமன் சிங் சோன்வானியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், அரசுப் பணிகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை நியமிக்க ஏதுவாக, தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது தெரியவந்தது. 2024ல் டாமன் சிங்கை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது ஜாமினில் உள்ளார்.

மாவட்ட துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்கள் சிலரிடம் லஞ்சம் வாங்கியதும், அதை திருப்பித் தராமல் ஏமாற்றியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், ஒரு பகுதி ரொக்கமாகவும், மற்றொரு பகுதி அவரின் குடும்பத்தின் பேரில் இருந்த அமைப்புக்கும் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.

டாமன் சிங் சோன்வானி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், டாமன் சிங்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source link