அடுத்த கேபினட் செயலாளர் யார்?

புதுடில்லி: டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், ஒரு விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அது, ‘அடுத்த கேபினட் செயலர் யார்?’ என்பதே. கேபினட் செயலர் என்பவர், நாட்டிலுள்ள அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் தலைவர். இந்திய அரசில் என்ன நடக்கிறது, உளவுத்துறை மற்றும் ‘ரா’ அமைப்பு எப்படி செயல்படுகிறது என, அனைத்து விபரங்களையும் அறிந்து வைத்திருப்பார். அத்துடன், பிரதமருக்கும் நெருக்கமாக இருப்பார்.

தற்போது, கேபினட் செயலராக உள்ள, தமிழரான டி.வி. சோமநாதன், அடுத்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இந்த பதவியில் உள்ளவர்களுக்கு, பதவி நீட்டிப்பு வழங்குவது வழக்கம். ஆனால், ‘எனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம்’ என பிரதமரிடம், சோமநாதன் சொல்லிவிட்டதாக பேசப்படுகிறது.

தற்போது, ‘நீட்’ விவகாரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, தீர்வு காண சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற மசோதாவை, இரண்டே நாளில் தயார் செய்ய உதவியவர், கேபினட் செயலர். இவர் பணி நீட்டிப்பு வேண்டாம் என கூறினாலும், இப்போதுள்ள சூழ்நிலையில், இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

ஒரு வேளை, இவருக்கு நீட்டிப்பு கிடைக்காவிட்டால், யார் இந்த பதவிக்கு வருவார்? இதற்கான பரிசீலனை பட்டியலில், சரண்யன் கிருஷ்ணன் மற்றும் கோவிந்த் மோகன் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இதில், தமிழக அதிகாரியான, சரண்யன் கிருஷ்ணன், மத்திய அரசின் முக்கியத் துறையான, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலராக பணியாற்றி வருகிறார்.

‘ஏ.ஐ.,’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக பல விஷயங்களை இவர் செய்துள்ளார். இவரும் பிரதமருக்கு நெருக்கமானவர் என அறியப்படுகிறார். கோவிந்த் மோகன் தற்போது, உள்துறை செயலராக இருப்பவர். பல இக்கட்டான தருணங்களில் மத்திய அரசுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கிய இவரும் கேபினட் செயலராக வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது. இந்த வார இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேபினட் செயலர் யார் என்பதை மத்திய அரசு அறிவிக்கும்.

Source link