சென்னை: ‘டில்லி உயர் நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், மீண்டும் கட்டணம், 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது’ என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மொத்தம் 7,000 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள், 80 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 66 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,1 முதல், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில், செப்.,1 முதல் மாற்றம் செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக, ஏப்ரல் மாத கட்டண உயர்வு, மே 23 முதல் அமலுக்கு வந்தது. தற்போது, செங்கல்பட்டு பரனுார் உட்பட, 10க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், புதிய கட்டணங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடு கட்டணத்தை குறைத்தது.
இது தொடர்பான வழக்கில், நீதிமன்றம் முந்தைய விலை குறியீடு கட்டணத்தை, மீண்டும் பயன்படுத்த உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், அமைச்சகம் ஜூன் 29ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டு, பழைய கணக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தியது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட, ஒரு முறை கட்டணக் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மே மாதத்திற்கு பின், இது இரண்டாவது கட்டண உயர்வாகும்.
இதனால், வாகனங்களுக்கு ஏற்ப, 5 ரூபாய் முதல், அதிகபட்சமாக 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் படிப்படியாக அமலுக்கு வரும். அதுபோல், சுங்கச்சாவடியில் இருந்து, 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான, மாதாந்திர பாஸ் கட்டணம் 350 ரூபாயில் இருந்து 360 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
