புதுடில்லி: தமிழக முதல்வரான, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்தாண்டு கரூரில் தேர்தல் பிரசாரம் செய்த போது, கூட்ட நெரிசலில், 41 பேர் இறந்தனர். இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி தலைமையில், மூவர் அடங்கிய குழுவை நியமித்து, விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டது.
த.வெ.க., தலைவர் விஜய், த.வெ.க., நிர்வாகிகள், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என, பலரையும் டில்லி அழைத்து, சி.பி.ஐ., விசாரணை செய்தது. மாதந்தோறும் விசாரணை நிலவரத்தை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவிற்கு, அறிக்கையாகவும் சி.பி.ஐ., அளித்து வந்தது.
தற்போது, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கையும் தயாராகிவிட்டது. இதை, இந்த வாரத்தில், நீதிபதி அஜய் ரஸ்தோகியிடம், சி.பி.ஐ., சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கையை நீதிபதியும், மற்ற இரண்டு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் படித்து, அதில் சில விளக்கங்களையும் சி.பி.ஐ.,யிடம் கேட்பர். அதன் பின், வரைவு அறிக்கை உறுதி செய்யப்படும் என, சொல்லப்படுகிறது.
இதையடுத்து, இறுதி அறிக்கை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். உச்ச நீதிமன்ற அனுமதிக்கு பின், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். கரூர் சம்பவத்தை வைத்து, அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக சட்டசபை தேர்தலின் போது, அரசியல் செய்தன. விரைவில் இதற்கு ஒரு முடிவு வர உள்ளது.
