-நமது நிருபர் –
நாகர்கோவிலில் நடந்த தனியார் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆபாசமாக பேசியது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ம் தேதி நடக்க உள்ள நிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் விவாதங்களில் பங்கேற்று சாதனைகளை பட்டியலிட்டு வருகின்றனர்
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் டிவி சார்பில் பொது விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். அவருடன் நாதக , அதிமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை, டைடல் பார்க் உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு மனோ தங்கராஜ் பதிலளித்து கொண்டிருந்தார்.
அதற்கு பார்வையாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். மேடையில் இருந்த நாதக பிரதிநிதியும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
தொடர்ந்து டைடல் பார்க் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. டைடல் பார்க் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறினார்.பார்வையாளர்கள் தரப்பில் இருந்து எப்போது வரும் என கேட்டு சத்தம் போட்டனர். அதற்கான வேலை நடந்து கொண்டிருப்பதாக மனோ தங்கராஜ் கூறினார். உடனடியாக பார்வையாளர்கள் மத்தியில் இருந்து சத்தம் போட்டனர்.
தொடர்ந்து மனோ தங்கராஜ் கூறுகையில், என்ன பிரச்னை கேள்வி எழுப்பினார். சிலர் ஊழல் எனக்கூற, பொறுமையிழந்த அமைச்சர்,’ என்ன ஊழல், டேய் நாங்கள் விசில் அடிக்கும் காலத்தில் நீங்கள் நிற்கக்கூட இல்லடா, உங்க அப்பாவோடு கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா’ என்றார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், பொது நிகழ்ச்சியில் அநாகரிகமாக பேசியதாக, அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
