ஆஸ்திரியா நாட்டில் பிளம்பருக்கு அதிர்ஷ்டம்: ரூ.23 கோடி தங்க புதையல் கிடைத்தது

வியன்னா: ஆஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, ‘பிளம்பர்’ ஒருவர் கண்டெடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள ஒரு பழமையான சொகுசு பங்களாவில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன.

அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பிளம்பர் ஒருவர், அடித்தளத்தின் சிமென்ட் தரையில், அடியில் இருந்து ஒரு கயிறு வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கவனித்தார்.

சாதாரண கயிறு தானே என்று விட்டுவிடாமல், அது எங்கே இருந்து வருகிறது என்பதை அறியும் ஆர்வத்துடன், சிமென்ட் தரையை தோண்டத் தொடங்கினார். அப்போது கயிற்றுடன் துருப்பிடித்த ஒரு பழைய இரும்புப் பெட்டி புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.

அந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பளபளக்கும், 30 கிலோ தங்கக் காசுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு 23 கோடி ரூபாய். அவை இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு முன் மற்றொரு தொழிலாளி; அந்த கயிற்றை பார்த்துள்ளார். ஆனால், அசட்டையாக விட்டுவிட்டார்.

ஆஸ்திரிய நாட்டின் சட்டப்படி புதையல் கண்டெடுக்கப்பட்டால், அதில் கிடைக்கும் மதிப்பை கண்டெடுத்த நபரும், அந்த நிலத்தின் உரிமையாளரும் பாதியாக பிரித்துக் கொள்ளலாம். இதன் மூலம், அந்த பிளம்பர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

Source link