டெண்டரே விடாமல் ஆண்டுக்கு ரூ.5.75 கோடி பணி; கோவை மாநகராட்சி கன்ட்ரோல் ரூம் பராமரிப்பில் ஊழல்

கோவை: கோவை மாநகராட்சி கன்ட்ரோல் ரூம் பராமரிப்புக்கு டெண்டரே விடாமல், ஆண்டுக்கு ரூ. 5.75 கோடி என, மூன்று ஆண்டுகளாக பணி ஒதுக்கி, முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் இரு திராவிட கட்சி ஆட்சியிலும், ஏராளமான ஊழல் நடந்துள்ளது, ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்காவில், 40 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் தெரிவித்தது. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

வரி வசூல், திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிகலையரங்க வளாகத்தில், 2024ம் ஆண்டு ரூ.1.5 கோடி மதிப்பில் கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டது. இதன் பராமரிப்பிலும் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அலுவலகத்தில் 40 பேர், களத்தில் 40 பேர் வீதம் மொத்தம் 80 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வரி செலுத்துவது தொடர்பாக மக்களுக்கு நினைவூட்டுவது, திடக்கழிவு மேலாண்மைக்கு செல்லும் வாகனங்களை ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணி களை செய்து வருகின்றனர்.

இதற்கான ஊழியர்களை பணியமர்த்தி, கட்டுப்பாட்டு அறையை பராமரிக்கும் பணியை, ‘ரிலையன்ட் குளோபல் க்ரீன் எனர்ஜி அண்ட் கோ’ நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.5.75 கோடி ஒதுக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக டெண்டரே இல்லாமல் அந்நிறுவனத்துக்கு பணி ஒதுக்கியதாக புகார் எழுந்துள்ளது.

மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘விதிகள்படி, 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணிக்கு டெண்டர் விடுவது அவசியம். பேரிடர் போன்ற அவசர காலங்களில் 50 லட்சம் ரூபாய் வரை டெண்டர் இல்லாமல் பணி ஒதுக்க விதி உள்ளது. அதை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு பணிகளை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளனர். டெண்டர் விடுத்தால் போட்டி அதிகரித்து வேறு நிறுவனத்துக்கு பணி செல்ல வாய்ப்புள்ளதால், டெண்டரே விடாமல் சாதாரண பணியை கூட பல ஆண்டு களுக்கு நீட்டித்து முறைகேடு செய்துள்ளனர்.

‘ஆர்.எஸ்.புரம் கன்ட்ரோல் ரூமில் ஊழியர்களை பணியமர்த்தி, அலுவலக பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.5.75 கோடி ஒதுக்கப்படுகிறது. ஒப்பந்தப்படி ஊழியர்கள், ஒவ்வொருக்கும் மாதம் 29 ஆயிரம் ரூபாய் சம்பளம் ஒதுக்க வேண்டும். இதில் பாதி தொகை தான் சம்பளமாக வழங்கப்படுகிறது.

தி.மு.க., ஆட்சியில் உயரதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்ததால் ரிலையன்ட் நிறுவனத்துக்கு இப்படி பல்வேறு பணி வழங்கப்பட்டது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

ஊழியர்கள் புகார்

கன்ட்ரோல் ரூமில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், ”எங்களுக்கு வார விடுமுறை கிடையாது. ஒருநாள் பணிக்கு வரவில்லை என்றாலும் அன்று சம்பளம் இல்லை. அரசு விடுமுறை நாட்களில் கூட, பணி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.
12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற வற்புறுத்துகின்றனர்.

அலுவலர் ஒருவர், பணியாற்றும் பெண் ஊழியர்கள் குறித்து கொச்சையாக பேசுகிறார்; உருவ கேலி செய்கிறார். பெண் ஊழியர்கள் என்றும் பார்க்காமல் கை ஓங்கி அடிக்க வருகின்றனர்.
பணியிலேயே இல்லாதவர்களை, ஊழியர் பட்டியலில் இணைத்து கணக்கு காட்டுகின்றனர்’ என்றனர். மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜாவிடம் கேட்டபோது, ”முழுமையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Source link